அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி! தீண்டாமை ஒழிப்பு முன்னணி இரங்கல்

'இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதைப் பாதுகாக்க குரல் எழுப்பியவர் கருணாநிதி' என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பி.சம்பத்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் கூறும்போது, 'திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மறைவுக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பின்தங்கிய சமூகத்தில் பிறந்து தனது உழைப்பால், திறமையால் உயர்ந்தவர். அவர், தீவிர பகுத்தறிவுவாதியும், சமூக நீதி பற்றுக்கொண்டவரும் ஆவார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர், மறைந்த என்.வரதராஜன் தலைமையில் 2006 முதல் 2009 வரை அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டங்களை ஏற்று, அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை சட்டமாக்கியவர். இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நேர்கிறபோதெல்லாம், அதை பாதுகாத்திட குரல் எழுப்பியவர். சமீப காலமாக மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தவர். இத்தகைய பங்களிப்பு செய்துள்ள கருணாநிதியின் மறைவுக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!