வெளியிடப்பட்ட நேரம்: 01:52 (08/08/2018)

கடைசி தொடர்பு:02:00 (08/08/2018)

மெரினாவில் இடம் கோரிய தி.மு.க வழக்கில் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு..! விசாரணை முழு விவரம்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, காலை 8 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மறைந்த தி.மு.க தலைவர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானர். அவரது உடலை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மெரினாவில் இடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து, தி.மு.க சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். வழக்கில் தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 'மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மெரினாவில் இடம் ஒதுக்குவதில் என்ன பிரச்னை உள்ளது' என்று கேள்வி எழுப்பினார். மேலும், மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தனர். டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு விதிகள் இல்லை' என்று வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் தொடர்பாக 6.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் காலை 8 மணிக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர். அதையடுத்து, வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வில் காலை 8 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.