வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (08/08/2018)

கடைசி தொடர்பு:08:02 (08/08/2018)

`` குலசாமியா நெனச்சே கலைஞர் இப்படி போயிட்டாரே!" - கண்ணீர் வடிக்கும் குளித்தலை குலுமாயி

``காமராஜர் இறக்கும்வரை நான் அவரைதான் சாமியா நெனச்சேன். அதுக்கு பொறவு நான் குலசாமியா நெனச்சது கலைஞர் அய்யாவைதான். ஆனா, அவர் உசுருக்கு முடியாம கிடக்குறார்ன்னு கேள்விப்பட்டதுக்கு பொறவு எனக்கு பச்சத்தண்ணி பல்லுல படலை; கண்ணுல பொட்டுத்தூக்கம் இல்லாம திரிஞ்சேன் தம்பி. அவர் உடம்பு சுகமாயி, பழையபடி நடமாடனும்ன்னு சொல்லி லாலாபேட்டை மாரியம்மன்கிட்ட சூடம் ஏத்தி வேண்டிகிட்டேன். ஆனா, என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிட்டாரே!" என்று கண்ணீரும் கம்பலையுமாக பேசுகிறார் குளித்தலையைச் சேர்ந்த குலுமாயி.


 

இவரது வீடு முழுக்க சூரியன் சின்னம் வரையப்பட்டிருக்கிறது. முகப்பில் உள்ள கேட்டில் சூரியன் சின்னம் இரும்புக்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது 13-வது முறையாக கலைஞர் எம்.எல்.ஏவாக தொடர்ந்து இருந்தாலும், அவர் முதன்முதலில் 1957-ம் ஆண்டு எம்.எல்.ஏவான தொகுதி கரூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் குளித்தலைதான். 'தன்னை முதன்முறையாக சட்டமன்றத்துக்கு அனுப்பிய தொகுதி' என்று கலைஞருக்கும், 'தங்கள் மீது கலைஞர் கரிசனம் கொள்ளக் காரணமான தொகுதி இது' என்று தொகுதி மக்களுக்கும் குளித்தலை மீது சிலாகிப்புகள் அதிகம். கலைஞர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வயோதிகம் காரணமாக மறைந்த செய்தியைக் கேட்டு குளித்தலை மக்கள் நிலைகுலைந்து போயுள்ளார்கள். மாற்றுக்கட்சி ஆள்கள்கூட,'முசிறி பாலம் கொண்டு வந்தது அவர்தான். பொன்னி ஆறு அணை கட்டியது அவர்தான்' என்று பாராட்டியே பேசுகிறார்கள்.  
 

குளித்தலை கொடிக்கால் தெருவைச் சேர்ந்த குலுமாயி பாட்டியோ, ``என்னைப்போல ஏழைபாழைகளுக்கெல்லாம் உதவி பண்ணிய காமராஜ் அய்யாவைதான் நான் தெய்வமா மதிச்சேன். எங்களுக்கு அவர் எவ்வளவோ செஞ்சார். அதனால், அவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன். என் குடும்பத்தையும் அவருக்கே ஓட்டு போடச் சொன்னேன். என் வீடு முழுக்க கை சின்னத்தை வரைஞ்சு வச்சேன். அந்த மவராசன் செத்ததும் துடிச்சுப் போயிட்டேன். 'இனி என்னைப்போல ஏழைங்க பாடு அவ்வளவுதான்'ன்னு உள்ளம் நொறுங்கிப் போயிட்டேன் கண்ணு. ஆனா, அவரைப் போல ஏழைகளை மதிக்கிற தலைவரா கலைஞர் தெரிஞ்சார். அதனால், காமராஜர் அய்யாவுக்கு பொறவு கலைஞரைதான் குலசாமியா ஏத்துக்கிட்டேன். முதியோர் உதவித்தொகை தந்தார். வீடு கட்டித் தந்தார். இதைவிட ஏழைகளுக்கு என்ன வேணும் தம்பி. அவரை மனசுல சாமியா ஏத்துக்கிட்டேன். அன்னையிலிருந்து அவரைதான் தலைவரா ஏத்துக்கிட்டேன். ஓட்டு போடுறதும் அவருக்குதான். என் வீடு முழுக்க கை சின்னத்தை அழிச்சுட்டு, சூரியன் சின்னத்தை வரையச் சொல்லிட்டேன். அவருக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், அடிமடியில இடி விழுந்தாப்புல ஆனுச்சு. ஒருவாரமா சரியா சாப்பிடாம, நல்லா தூங்காம அல்லாடுனேன். அவரை நேரா போய் பார்க்கலாம்ன்னு ரெண்டு நாளா காசு சேர்த்துக்கிட்டு இருந்தேன். அவர் நல்லாகனும்ன்னு வேண்டிகிட்டு எங்களை எல்லாம் காவந்து பண்ற லாலாபேட்டை மாரியம்மனுக்கு தினமும் விளக்குப் போட்டேன். ஆனால், எங்களை இப்படி நட்டாத்துல தவிக்கவிட்டுட்டு இப்படி போயிட்டாரே தம்பி. என் ஈரக்கொலையே நடுங்குதுய்யா" என்று கண்ணீர்விட்டார்.