வெளியிடப்பட்ட நேரம்: 08:29 (08/08/2018)

கடைசி தொடர்பு:10:02 (08/08/2018)

மெரினாவுக்காக நடக்கும் சட்டப் போராட்டம்- தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்

மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் நல்லடக்கத்துக்கு இடம் ஒதுக்கப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மெரினா

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ‘ அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா?’ என்பது இன்னும் உறுதியாகவில்லை. அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத்தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்  செய்ய இடம் ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷிடம் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


இது அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். வழக்கில் தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 'மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மெரினாவில் இடம் ஒதுக்குவதில் என்ன பிரச்னை உள்ளது' என்று கேள்வி எழுப்பினார். மேலும், மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தனர். டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்கு விதிகள் இல்லை' என்று வாதிட்டார். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் தொடர்பாக 6.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் காலை 8 மணிக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும்' என்று உத்தரவிட்டனர். அதையடுத்து, வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வில் இன்று காலை 8 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடலோர விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.