கருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை... நள்ளிரவில் நடந்தது என்ன ? #6pmto6am #MissUKarunanidhi

கருணாநிதி மறைவு முதல்... மெரினாவில் அனுமதி மறுப்பு வரை...  நள்ளிரவில் நடந்தது என்ன ? #6pmto6am #MissUKarunanidhi

06:10 pm கருணாநிதி காலமானார்

நேற்று மாலை 6.40 மணியளவில் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவந்த காவேரி மருத்துவமனையில் இருந்து அந்த அறிக்கை வெளியானது. ``மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், உடல்நிலை ஒத்துழைக்காததால் இன்று (7.8.2018) மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை இழந்துவிட்டோம். உலகத் தமிழர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கருணாநிதி

 

 7 நாள் துக்கம் அனுசரிப்பு. இன்று அரசு விடுமுறை :

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையடுத்து, தமிழகத்தில் இன்று (08-08-2018)  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 

07:00 pm திரையரங்குகள் மூடல்

இன்று முழுவதும் தமிழகம் முழுக்க திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

07:45 pm  மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது... தி.மு.க. கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய தி.மு.க. அனுமதி கோரியிருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த்து அனுமதி கோரினர். மேலும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், ``கலைஞர் உடலை அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமும், தி.மு.க-வினர் அனைவரின் விருப்பமும். இதற்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற நாங்கள் மற்றும் தலைவர் குடும்பத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தோம். அவர்கள் 'பார்ப்போம்' என அவரிடம் பேசி அனுப்பி விட்டார்கள். மீண்டும் முறைப்படி கேட்க வேண்டும் என்று செயல் தலைவர் கையொப்பமிட்டு முதல்வருக்கு வேண்டுகோள் மனுவை நானும், பொன்முடி, நேரு ஆகியோர் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தளபதி சார்பில் மனுவை அளித்தோம். அவர்கள் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். முழுமையான பதிலைத் தரவில்லை. எதிர்பார்த்திருக்கிறோம்," எனத் தெரிவித்தார்.

அரசு அறிவிப்பு

இந்நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ``காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்துக்கு அருகே, அன்னாரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்," எனத் தெரிவித்துள்ளார். மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க மறுப்பு தெரிவித்திருப்பது தற்போதைய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

08:00 pm மெரினாவில் இடம் மறுப்பு : வலுக்கிறது அரசியல் சர்ச்சை !

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது உடலை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என விரும்பினார். அவர் போலவே தி.மு.க.வினரும், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டச் சிக்கல்கள் உள்ளதால் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அரசுத்தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மெரினாவில் இடம் ஒதுக்காதது தற்போது புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய நிலையில், தற்போது கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்காதது ஏன் என்ற கேள்வியையும் தி.மு.க.வினர் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதற்கு, 'முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது' என்று எங்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும், 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை கொண்ட தலைவர் என்ற தார்மிக அடிப்படையில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கலாம் என்றும் தி.மு.க-வினர் கோரி வருகின்றனர். நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்றும் தி.மு.க-வினர் தெரிவிக்கின்றனர்.

08:30 pm  மெரினாவில் இடம் மறுப்பு ; இறந்தும் போராடும் கருணாநிதி :

80 ஆண்டு அரசியல் வாழ்க்கையைக் கொண்ட கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களைக் கண்டவர். உடல்நலக்குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடியவர், இன்று மாலை தன் முடிவை எய்தினார். இந்நிலையில், உயிரிழந்த பின்னர் தற்போது அண்ணா நினைவிடம் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்துக்காக இறந்தும் போராடி வருகிறார் கருணாநிதி. 

09:00 pm கோபாலபுரம் நோக்கி புறப்பட்டது கருணாநிதி உடல் :

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு முன்னால் மு.க.ஸ்டாலின் காரில் செல்கிறார்.

கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1.00 மணி வரையில் உறவினர்களால் இறுதி மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

11:00 pm  தி.மு.க தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க காலை 8 மணி வரை அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.  

01:00 am சி.ஐ.டி காலனி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கருணாநிதி உடல்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் அஞ்சலிக்குப் பின்னர் அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு!  

கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கில் காலை 8.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 8 மணிக்கு தமிழக அரசு மனுத் தாக்கல் செய்த பின்னர், அதை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதாக பா.ம.க வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்...

முதுபெரும் அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. மேலும், நாடு முழுவதும் நாளை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

02:00 am  மெரினாவில் இடம் ஒதுக்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சியே... எதிர்க்கட்சிகள் காட்டம் !

80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை; 5 முறை முதல்வர்; 13 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என தமிழக அரசியலில் அழுத்தம் திருத்தமாக முத்திரைப்பதித்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதியின் உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானது என பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்பு உணர்ச்சி கொண்டதாகும் என்றும், இப்பிரச்னையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

06:00 am கருணாநிதிக்கு ராணுவ மரியாதை:

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்மீது முப்படை வீரர்கள் தேசியக்கொடியைப்  போர்த்தி சல்யூட் அடித்து ராணுவ மரியாதை செலுத்தினர்.

 

 

தமிழக முதல்வர் பழனிசாமி, ``தமிழகத்தின் முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் தி,மு,க-வின் தலைவராக இருந்தவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது இழப்பு, தமிழகத்துக்கு  பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினர், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். செய்தியாளர்கள் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்குப் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்  முதல்வர் பழனிசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!