மெரினாவில்தான் அடக்கம் ஸ்டாலின் திட்டவட்டம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ‘அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா?’ என்பது இன்னும் உறுதியாகவில்லை.அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத்தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  காலை 9 மணி நிலவரப்படி  தி.மு.க தலைவர் உடலை எங்கே அடக்கம் செய்வது என இன்னும் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க  முன்னாள் அமைச்சர்கள் சிலர் இதுகுறித்து ஸ்டாலினிடம் விவாதித்துள்ளனர். அதற்கு அவர், நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் பிறகு பார்த்துக்கொள்வோம். தலைவரை மெரினாவில்தான் அடக்கம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார். 

மெரினா

இந்நிலையில், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார்  தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது அமைச்சர் ஒருவரிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ‘மெரினாவில் இடம் தரக்கூடாதா?’ என கேட்டுள்ளார். அதற்கு அவரோ,  ” ‘உங்களால்தான் இவ்வளவு பிரச்னையும்’ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ராணி மேரி கல்லூரிக்கு அருகில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர்.பாலு. அப்போது கடற்கரைக்கு உட்பட்ட பகுதிகளில் 500 மீட்டர் தூரத்தில் கட்டடம் எழுப்ப வேண்டும் என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்  என்ற சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தைதான் இப்போது பின்பற்றுகிறோம்” என்றாராம் அமைச்சர்.

இதனையடுத்து பேசிய தி.மு.க நிர்வாகி, ‘அங்கே கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை சமாதிக்கு எந்தச் சிக்கலும் இல்லை’ என பதிலளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!