சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Madras HC allows Karunanidhi’s body to be buried in the Marina

வெளியிடப்பட்ட நேரம்: 10:44 (08/08/2018)

கடைசி தொடர்பு:10:50 (08/08/2018)

சென்னை மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி! - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குப் பின்புறம் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

அண்ணா நினைவிடம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ‘அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா?’ என்பது இன்னும் உறுதியாகவில்லை.அவரது உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, காமராஜர் நினைவிடம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கத்தயார் என அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷிடம் தி.மு.க சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.இது அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள்குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். வழக்கில் தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 'மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்காவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மெரினாவில் இடம் ஒதுக்குவதில் என்ன பிரச்னை உள்ளது' என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தமிழக அரசை அறிக்கை தாக்கல் உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் முதலாம் அமர்வில் இன்று காலை 8 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கடலோர விதிமுறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை அவர் திரும்பப்பெற்றார். மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து, மெரினா தொடர்பான 5 வழக்குகளை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் தி.மு.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கருணாநிதி மிகப்பெரிய தலைவர், 13 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மெரினாவில் கலைஞருக்கு இடம் அளித்தால் சட்டச் சிக்கல்கள் எதுவும் வராது. வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் தடை ஏதும் இல்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பது குறித்து அரசு தெளிவான பதில் அளிக்கவில்லை என  தெரிவித்தார்.

தமிழக அரசின் வாதத்தில்,ஒரே நேரத்தில் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வைத்தது துரதிரஷ்டவசமானது. திராவிட இயக்கத்தின் மிகப்பெரும் தலைவரான பெரியாருக்கு மெரினாவில் நினைவிடம் உள்ளதா?. ஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது. அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோருவதற்கு யாருக்கும் உரிமையில்லை.காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் அடக்கம் செய்வது மரியாதைக்குரியது இல்லையா?. காந்தி மண்டபம் அருகே இடம் வேண்டாம் என்பது காந்தி, காமராஜர், பக்தவத்சலத்தை அவமதிப்பதிற்கு சமம். உடல் அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோருவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குப் பின்புறம் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.