புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு #Karunanidhi | Recent happenings regarding the death news of former cm karunanidhi

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (08/08/2018)

கடைசி தொடர்பு:12:16 (08/08/2018)

புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை வயது முதிர்வின் காரணமாக காலமானார். இதையடுத்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் கருணாநிதிருக்கு வெண்கலச் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவை

தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். இராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவையொட்டி பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ”5 முறை தமிழக முதல்வராக மக்களுக்கு பணியாற்றியவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமல்லாது தேசிய அரசியலில் பிரதமர்களை உருவாக்கியவர் அவர். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய அவதார புருஷர் கருணாநிதி. அவர் தமிழர்களின் பாதுகாவலர்” என்று இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது மறைவையொட்டி புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை என்றும் அறிவித்திருந்தார்.

இன்று காலை புதுச்சேரி அரசின் சார்பாக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான் மற்றும் துறை செயலர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் நேற்று தொடங்கி ஒருவார காலத்துக்கு புதுச்சேரி அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஒரு சாலைக்கு திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான  கருணாநிதியின் பெயர் சூட்டப்படுவதோடு அங்கு புதிதாக தொடங்கப்படும் பட்டமேற்படிப்பு மையத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும். அதேபோல புதுச்சேரியிலும் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
- ஜெ. முருகன்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 
-ராகவன்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவாரூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அவர் படித்த பள்ளியில் கண்ணீர் அஞ்சலி பலகை வைத்துள்ளனர்.
-சதீஷ் குமார்

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாகர்கோவிலில் உள்ள தி.மு.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டும், தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

-ராம்குமார்