கைத்தறியில் கேட்வாக்... அசத்திய கோவை கல்லூரி மாணவிகள்!

தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு, கோவையில் கல்லூரி மாணவிகள் பாரம்பர்ய கைத்தறி உடையில் கலக்கிய ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

கைத்தறி

தேசிய கைத்தறி நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கைத்தறி பொருள்களின் பயன்பாட்டை இன்றைய ஜென் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் விதமாக, கோவையில், தமிழக பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகள் கலந்துகொள்ளும் கைத்தறி ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 40 கல்லூரிகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான, இறுதிப் போட்டி இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கைத்தறி உடையில், மாணவ, மாணவிகள் கேட்வாக் செய்து அசத்தினார்கள்.  கண்கவர் ஆடையில் அவர்கள் கேட்வாக் செய்தபோது, பார்வையாளராக இருந்த மாணவிகள் ஆரவாரம் செய்து அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். மேலும், கைத்தறிப் பொருள்களின் பயன்பாடு குறித்து பதாகைகளை ஏந்தியும், பேசியும் மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், ``இந்த நாட்டின் பொருளாதார உயர்வுக்கு கைத்தறி உதவுகிறது. கைத்தறிப் பொருள்களை பயன்படுத்துவதன் மூலம், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை உயர்வதற்கு வழிவகுக்கும். பல நூற்றாண்டுகளாக, கைத்தறியில் உலகுக்கு புதிய வடிவங்களையும், ரகங்களையும் அறிமுகப்படுத்தும் இந்தியா, கைத்தறிப் பொருள்களின் ஏற்றுமதியில் மேலும் அதிகரிக்கவும், கைத்தறி நெசவை விட்டு, கைத்தறி நெசவாளர்கள் செல்லாமல் இருப்பதற்கும் நம்முடைய ஆதரவு முக்கியமானதாக இருக்கும். நாம் பயன்படுத்தும் துணி வகைகளில் 30 சதவிகிதம் கைத்தறியாக இருக்க வேண்டும் என்று அறிவித்து, அதன் விற்பனையையும் மோடி அதிகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், நாட்டின் பொருளாதாரமும், நெசவாளர்களின் வாழ்க்கையும் முன்னேறுவதற்காகவும் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் உதவி செய்யும்" என்றார்.

இந்த ஃபேஷன் ஷோவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நடிகை மாளவிகா அவிநாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!