வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (08/08/2018)

கடைசி தொடர்பு:11:35 (08/08/2018)

தீர்ப்பைக் கேட்டதும் கைகூப்பி ஆனந்தக் கண்ணீர்விட்ட ஸ்டாலின்! தேற்றிய கனிமொழி, ஆ.ராசா

மெரினாவில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா ஆகியோர் தேற்றினர்.

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உயிர் நேற்று மாலை பிரிந்தது. இதையடுத்து அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தீர்மானித்து அதற்காக தமிழக அரசிடம் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச் சிக்கல் உள்ளதாகக் கூறி அவருக்கு இடம் தர தமிழக அரசு மறுத்தது. இதையடுத்து, தி.மு.க தரப்பு நீதிமன்றத்தை நாடியது. நள்ளிரவு நடந்த இந்த வழக்கின் வாதத்தில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது.

அண்ணா சமாதியில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பைக் கேட்டவுடன் கருணாநிதியின் உடல் அருகில் நின்றுகொண்டிருந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். அப்போது அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலினை தேற்றினர். இந்தச் சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜாஜி மஹாலில் இருந்த தொண்டர்கள் உற்சாகமாக முழக்கம் எழுப்பினர். வாழ்க வாழ்க வாழ்கவே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்கள் தலைவருக்கு கிடைத்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

அப்போது ராஜாஜி மஹாலில் தொண்டர்களைப் பார்த்துப் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ``உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்தபிறகும் கருணாநிதிக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க