சிறுநீர்த் தொற்று; கல்லீரல் பாதிப்பு; மூச்சுத் திணறல்! - கருணாநிதிக்கு எமனாக வந்த செப்டிசீமியா! | Did dmk chief karunanithi affected by Septicemia?

வெளியிடப்பட்ட நேரம்: 12:52 (08/08/2018)

கடைசி தொடர்பு:12:52 (08/08/2018)

சிறுநீர்த் தொற்று; கல்லீரல் பாதிப்பு; மூச்சுத் திணறல்! - கருணாநிதிக்கு எமனாக வந்த செப்டிசீமியா!

ரத்த அழுத்தம் குறைவதற்கு செப்சிஸ் (sepsis) ஒரு காரணமாக இருக்க முடியும் என்பதும் ரத்தத்தில் கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது ஈரல் பிரச்னை, ரத்தத்தில் மாறுதல்கள், மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சிறுநீர்த் தொற்று; கல்லீரல் பாதிப்பு; மூச்சுத் திணறல்! - கருணாநிதிக்கு எமனாக வந்த செப்டிசீமியா!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்புக்குக்கான மருத்துவக் காரணங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ' கருணாநிதியின் உடலில் ஈரல் பிரச்னை, ரத்தத்தில்  மாறுதல்கள், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளை உருவாக்கியது செப்டிசீமியா நோய்தான் என்பது தெளிவாகிறது' என்கின்றனர் மருத்துவர்கள். 

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்த கருணாநிதிக்கு, கடந்த 27.7.18 அன்று ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக, நள்ளிரவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'ரத்த அழுத்தக் குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. கருணாநிதி உடல் நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த நாள் மாலை 5.30 மணியளவில் அவர் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளால், குடும்ப உறுப்பினர்களும் கட்சித் தொண்டர்களும் கவலையடைந்தனர். அடுத்த சில மணித்துளிகளில் அவரது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், கல்லீரல் பாதிப்புகளுக்கும் ஆளானார் கருணாநிதி. ஆனாலும், மருத்துவ சிகிச்சையில் எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. இதன் விளைவாக, நேற்று மாலை காலமானார் கருணாநிதி. 

வயது முதிர்வின் காரணமாக வரக் கூடிய உடல் உபாதைகளுக்குக் கருணாநிதி ஆளாகியிருந்தாலும், அவரை முதன் முதலாக பாதித்த மீசெல்ஸ் நோயும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் மருத்துவர்கள் தெளிவுபடுத்தவில்லை. 29-ம் தேதி ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ரத்தம், கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்குத் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. வயது காரணமாக, மருத்துவமனை உதவி அவருக்கு மேலும் சில நாள்கள் தேவைப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தது. சிறுநீர்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ரத்தம், கல்லீரல் என மருத்துவர்கள் வகைப்படுத்தியதும், ' செப்டிசீமியா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் கருணாநிதி' என்ற முடிவுக்கு வந்தனர் அவரது குடும்ப மருத்துவர்கள். 

கருணாநிதி, காவேரி மருத்துவமனை

சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தியிடம் பேசினோம்.``ரத்த அழுத்தம் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. வீட்டிலேயே அளித்த சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக அவருடைய உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டது. ஆனால், மீண்டும் 29.7.2018 அன்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவ சிகிச்சை மூலம் அது சரிசெய்யப்பட்டு இயல்பு நிலைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக  உடல்நிலை முன்னேறி வந்தது. இருப்பினும், வயதின் காரணமாக ஏற்படும் உடல்நிலை பிரச்னை காரணமாகவும் ஈரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் ரத்தத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாகவும் அவருக்கு இன்னும் சில நாள்களுக்குத் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையுள்ளது என 31.7.2018 அன்று மாலை  6.30 மணிக்குக் காவேரி மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை கூறுகிறது. இருப்பினும் மேற்கூறிய மருத்துவப் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் என்னவென்று தெளிவாக விளக்கப்படவில்லை. அவரது ரத்த அழுத்தத்திலும் அவ்வப்போது குறைபாடு நிலவியது. கூடவே, மஞ்சள் காமாலை பாதிப்பும் சேர்ந்துவிட்டது. இதற்குக் காரணம், சிறுநீரகத் தொற்று முழுமையாக மருத்துவக் கட்டுப்பாட்டுக்குள் வராததுதான். சிறுநீரகத் தொற்றின் காரணமாக ரத்தத்தில் கிருமி கலந்துவிட்டது. இதே ரத்தம் கல்லீரலுக்கும் சென்று சேர்ந்து டெபாசிட் ஆகிவிட்டது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது" என்றவர்,  

``அமெரிக்கன் நெஞ்சக மருத்துவ துறையின் (American thoracic society) அறிக்கை ஒன்றில், ரத்தத்தில் கிருமித் தொற்று (sepsis) ஏற்படும் விதங்களை விளக்கியுள்ளது. அதன்படி பார்த்தால் ரத்த அழுத்தம் குறைவதற்கு செப்சிஸ் (sepsis) ஒரு காரணமாக இருக்க முடியும் என்பதும் ரத்தத்தில் கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது ஈரல் பிரச்னை, ரத்தத்தில் மாறுதல்கள், மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் செப்சிஸ் (sepsis)  ஏற்பட சிறுநீர்த் தொற்று முக்கியக் காரணம் என்றும் வயதானவர்களை அது அதிகம் பாதிக்கும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும், கருணாநிதியின் உடல் உபாதைகளுக்கு (ரத்தத்தில் கிருமித் தொற்று) அடிப்படைக் காரணமாக அமைந்துவிட்டது. சிறுநீர்த் தொற்று பாதிப்புதான் கருணாநிதிக்கு எமனாக அமைந்துவிட்டது. ரத்தத்தில் கலந்து செப்டிசீமியா பாதிப்பு ஏற்பட்டு உள் உறுப்புகளை செயல் இழக்கச் செய்துவிட்டது!" என்றார் நிதானமாக.