வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (08/08/2018)

கடைசி தொடர்பு:14:53 (08/08/2018)

மெரினாவில் விறுவிறு பணிகள்... கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ரூட் 

 கருணாநிதி

அண்ணா சமாதியின் வலதுபுறத்தில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இரண்டு ஜே.சி.பிக்கள் மூலம் குழிதோண்டும் பணிகள் நடந்துவருகின்றன. 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடஒதுக்கீடு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தொடர்ந்து அண்ணா சமாதிக்குப் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 

அண்ணா சமாதி அமைந்துள்ள இடத்தின் வலதுபுறத்தில் இரண்டு ஜே.சி.பி-க்கள் மூலம் குழிதோண்டும் பணிகள் நடந்துவருகின்றன. அதே நேரத்தில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் ஆலோசித்துவருகின்றனர். ராஜாஜி ஹாலிலிருந்து அரசு மரியாதையுடன் அவரின் உடல் அண்ணா சமாதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம், வாலாஜா சாலை வழியாக அண்ணா சமாதி சென்றடையும். லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால் அந்த சாலையை போலீஸார் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ராஜாஜி ஹாலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதுடன், மாற்றியும் விடப்பட்டுள்ளது. 

கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி சென்னையில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ராஜாஜி ஹால் அமைந்துள்ள பகுதிகளில் தற்காலிக நடைபாதைக் கடைகள் முளைத்துள்ளன. அங்கு டீ முதல் டிபன் வரை விற்பனை படுஜோராக நடந்துவருகின்றன.