வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (08/08/2018)

கடைசி தொடர்பு:14:18 (08/08/2018)

கருணாநிதியின் சந்தனப்பேழையின் மீது இடம்பெற்றுள்ள வாசகம்!

கருணாநிதி

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல் வைக்கப்படவுள்ள சந்தனப்பேழையின் மீது `ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. 

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல், அண்ணா சமாதியின் வலதுபுறத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்கானப் பணிகள் அண்ணா சமாதி அருகில் நடந்துவருகிறது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் அரசு மரியாதையுடன் நடக்கிறது. பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமாகிவருகிறது. இதனால் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் அரண் போல விரைவுப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருணாநிதி அடக்கம் செய்யப்பட உள்ள சந்தனப்பேழையின் உள்பக்கம்

இந்த நிலையில், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்யும் சந்தனப்பேழை தயாராக உள்ளது. அந்தப் பெட்டியின் இரண்டு இடங்களில் `ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. கருணாநிதியின் இறுதி அஞ்சலி ஊர்வலம் ராஜாஜி அரங்கத்திலிருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக பெரியார், அண்ணா சிலைகள் வழியாக வாலாஜா சாலை, காமராஜர் சாலையைக் கடந்து அண்ணா சமாதிக்குச் செல்லும் என்று கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ராஜாஜி அரங்கில் கூட்ட நெரிசலால் தள்ளு, முள்ளு சம்பவங்கள் ஏற்பட்டன. இதனால் தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். அமைதி காக்க வேண்டும் என்று கூறினார். அவரின் பேச்சைக் கேட்டத் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.