வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (08/08/2018)

கடைசி தொடர்பு:15:59 (08/08/2018)

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம்... கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலிலிருந்து ராணுவ வாகனத்தில் மெரினாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மெரினா

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை 6.10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாகக் காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

தற்போது, தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சமாதியின் வலதுபுறத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்களும் தி.மு.க தொண்டர்களும் திரண்டுள்ளனர்.