வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (08/08/2018)

கடைசி தொடர்பு:16:35 (08/08/2018)

கருணாநிதியின் 75 வயது பிள்ளை... முரசொலி!

கருணாநிதியின் 75 வயது பிள்ளை... முரசொலி!

``தவழ்ந்தாடும் - தத்தி நடக்கும் - தணலை மிதிக்கும் - விழும்! எழும்! ஆனாலும் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மண்டியிட வைத்ததில்லை... முன்வைத்த காலை பின்வைக்க நினைத்ததுமில்லை! `முரசொலி' நான் பெற்ற முதல் குழந்தை! ஆம் அந்த முதற்பிள்ளைதான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல கிண்கிணி அணிந்த கால்களுடன் பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்கச் சென்று வா மகனே! செருமுனை நோக்கி! என அனுப்பி வைக்கப்பட்ட அன்புப் பிள்ளை!'' -  என்று `முரசொலி' பற்றிச் சொன்னவர் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி.

கருணாநிதியும் முரசொலியும்

தி.மு.க-வின் கட்சி இதழான, `முரசொலி' தனது 75-வது ஆண்டில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. 60 ஆண்டுக்காலம், ஒருநாள் விடாமல் தினசரி இதழாக வெளியாகிக்கொண்டிருக்கிறது. தி.மு.க தலைவரான மு.கருணாநிதிதான் இந்தப் பத்திரிகையின் நிறுவனர். தி.மு.க-வுக்கு விசுவாசமான தொண்டர்களைக் கட்டி எழுப்பவும் அறிவுஜீவி அணிகளை உருவாக்கி, கட்சிக்கு அமைப்புரீதியான ஓர் அரணை உருவாக்கவும் ஒரு முக்கியப் பங்கெடுத்தது என்றால், அது முரசொலிதான். ஆதலால், அதையே கருவாக வைத்து கருணாநிதி அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் கட்சியினருக்குப் பிரத்யேகமாகச் சொல்ல வேண்டிய தகவல்களையும் `முரசொலி'யில் எழுதி வந்தார்.

தனது வழிகாட்டிகளான பெரியார் (குடியரசு), அண்ணா (நம் நாடு)ஆகியோரின் எழுத்துப் பாணியைப் பின்பற்றி எழுதிய கருணாநிதி  திராவிட இயக்கம், தி.மு.க லட்சியங்கள் குறித்த கருத்துகளையும் அதில் கொட்டினார்; ஆட்சியின் அவலங்களையும் தாக்கி எழுதினார்.  ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க சாதனைகளைப் பட்டியலிட்டு பறைசாற்றிய முரசொலி, எதிர்க்கட்சியினர் செய்யும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் தளமாகவும் விளங்கியது. இது, பொதுவெளியில் தி.மு.க தொண்டன் செல்லவேண்டிய பாதையை நன்றாக அமைத்துக் கொடுத்தது. `முரசொலி'யில் நாள்தோறும் வெளியாகும் கட்டுரைகள், தலையங்கங்கள், கவிதைகள், நாடகங்கள், அறிக்கைகள், சிறுகதைகள் என்று எல்லாவற்றையும் படித்து கட்சிக்காரர்கள் விவாதித்தினர். அவர்களுக்கு, அது ஒரு வகையில் அரசியல் ஆர்வத்தைத் தூண்டியது. ஆட்சி நிர்வாகத்தை அறிந்துகொள்ளவும், மாற்றுக் கட்சியினருக்குப் பதில் சொல்லவும் தகவல்களைக் கொடுத்தது. 

முரசொலி

ஒவ்வொரு பத்திரிகையும் தனக்கே உரித்தான சில ஸ்பெஷல் விஷயங்களைக் கொண்டிருப்பதைப்போல, `முரசொலி'யும் ஒரு சிறப்பைக் கொண்டிருந்தது. அது, கருணாநிதி எழுதிய `உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் கடிதம்தான். ஆரம்ப காலங்களில், `முரசொலி'யில் அவர் எழுதிய கடிதங்களில் தொண்டர்களை, `நண்பா' என்று விழித்துதான் கடிதத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர், `அன்புள்ள தம்பி' என்று மாற்றியவர், கடந்த 25 ஆண்டுகளாகவே, 'உடன்பிறப்பே'  என்று உருக்கமாக அழைத்து எழுதினார். வயது மூப்பின் காரணமாக, கருணாநிதி எழுவதை நிறுத்திக்கொண்டாலும் அதற்குப் பிறகு அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியைப் பின்பற்றி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், `உங்களில் ஒருவன்' என்று ஆரம்பித்து தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். 

75 ஆண்டுகளாகத் தி.மு.க பத்திரிகையாக, `முரசொலி' இருந்தாலும், 1969-ம் ஆண்டு கருணாநிதி, தி.மு.க தலைவர் ஆன பின்னர்தான் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு ஆக `முரசொலி' மாறியது. அதன்பிறகு, கட்சியின் அறிவிப்புகள், நியமனங்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் என்று கட்சியின் அன்றாட முழு நடவடிக்கைகளை ஒவ்வொரு தொண்டனும் அறிந்துகொள்ளும் அளவுக்கு `முரசொலி' வளர்ச்சி பெற்றது. கட்சி விரோத நடவடிக்கை என்று கட்சியினர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்போது, பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெயரில், `கட்டம் கட்டி' செய்திகள் வரும். இதே நடைமுறை மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நடத்திய டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழிலும் உண்டு. இந்த வழக்கமே நாளடைவில் ஒருவரை ஒதுக்கிவைத்தால், ``கட்டம் கட்டியாச்சா.." என்று பேசும் அளவுக்கு மாறிப்போய்விட்டது.

முரசொலி பவளவிழா

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட, `நெருக்கடி நிலை' தி.மு.க-வுக்குப் பெரும் சோதனைக்களமாக இருந்தது. மிசா சட்டத்தில் ஏராளமானோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக `முரசொலி' காட்டிய தீவிரம், அதன் 75 ஆண்டுக்கால வரலாற்றின் சிகரம் என்றுதான் சொல்ல வேண்டும். நெருக்கடி காலத்தில் இருந்த தணிக்கை கட்டுப்பாடுகளைத் தாண்டி கட்சி செய்திகளைத் தொண்டர்களிடையே கொண்டுசென்றது கருணாநிதியின் சாதனை. சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர்களை, நிர்வாகிகள் பெயரை `முரசொலி'யில் நேரடியாக வெளியிட்டால் தணிக்கையில் சிக்கி, கறுப்பு மை பூசிவிடுவார்கள் என்பதால், நேரடியாக அதை எழுதாமல், ``அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்..!''  (1976 பிப்ரவரி, 3)  என்று தலைப்பிட்டு மிகவும் நுணுக்கமாகக் கட்டுரை எழுதினார் கருணாநிதி. 

அரசியல் பணிகளைப்போலவே, சமூகப் பணிகளிலும் `முரசொலி'யை முன்னிறுத்தினார் கருணாநிதி. புயல், வெள்ளச் சேதம் என்று நாட்டில் எந்த இடத்தில் எது நடந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் எதிர்க் கட்சியாக இருந்தாலும், `நிவாரண நிதி' வசூலில் `முரசொலி' இறங்கிவிடும். நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், தி.மு.க அனுதாபிகள் என்று நிதி கொடுத்தோர் பெயர் பட்டியல், `முரசொலி'யில் இடம்பெறும். பின்னர் அந்த நிதியை, உரிய அரசிடம் கொடுத்துவிடுவது முரசொலியின் கடமையாகவும் வாடிக்கையாகவும் இன்றுவரை இருக்கிறது. 

முரசொலி

``இன்றைய செய்தி; நாளைய வரலாறு..." என்பதுதான் `முரசொலி'யின் சங்கநாதம். அரசியலைத் தாண்டி தமிழ் இலக்கியம், தமிழ் வளர்ச்சி என்று பல வகைகளிலும் `முரசொலி' தடம்பதித்து வருகிறது. திராவிட இயக்க வரலாற்றுப் பெட்டகமாக இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது. கருணாநிதியின் முதல் குழந்தையான `முரசொலி'க்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயது 75. முரசொலி ஆரம்பித்த காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள், திராவிட இயக்கக் கொள்கைகளைப் பறைசாற்றி வெளிவந்தன. ஆனால், பல தடைகளைத் தாண்டியும் இன்றுவரை வெற்றிகரமாக வெளிவந்துகொண்டிருப்பது `முரசொலி' மட்டுமே... இப்படி, 75 வயது மகனாக வளர்ந்திருக்கும் கருணாநிதியின் `முரசொலி', பவள விழாவைத் தி.மு.க. கடந்த ஆண்டு கொண்டாடியது.

கலைவாணர் அரங்கத்தில் நடந்த இந்த விழாவில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்டவர்களை அழைத்து பிரமாண்டமாகச் சிறப்பித்தார், மு.க.ஸ்டாலின். கோடம்பாக்கம் `முரசொலி' வளாகத்தில் வைத்திருந்த `முரசொலி' பவள விழா அரங்கை உடல் நலிவுற்ற நிலையிலும் வீல் சேரில் அமர்ந்தபடியே பார்த்து ரசித்தார் கருணாநிதி. உடல் ஆரோக்கியமாக இருந்தபோது தினசரி, முரசொலி அலுவலகம் சென்றுவந்த கருணாநிதி, அந்தப் பத்திரிகையின் 50 ஆண்டு தலைப்புச் செய்தியாக இருந்தார். இப்போது அவரது மரணத்தையடுத்து, அந்தப் பத்திரிகையில் மட்டுமல்ல... அனைத்துப் பத்திரிகைகளிலும் அவரே தலைப்புச் செய்தியாகிவிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்