வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (08/08/2018)

கடைசி தொடர்பு:21:12 (08/08/2018)

`என்றென்றும் வருந்துகிறோம்’ கள்ளிமடை அ.தி.மு.க அலுவலகத்தில் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு, கோவை கள்ளிமடையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கள்ளிமடை அ.தி.மு.க

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல்நலக்குறைபாடு காரணமாக நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் மறைவுக்காக, கோவையில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க-வினர் மௌன அஞ்சலி செலுத்தினர். கவுண்டம்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் தொண்டர்கள் மொட்டையடித்தனர். கோவை பத்திரிகையாளர்கள் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

வால்பாறையில் கொட்டும் மழையில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் சார்பில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவையில், இன்று அதிகாலை தொடங்கி மழை பெய்து வருகிறது. “கலைஞரின் மறைவால் சூரியன் உதிக்கவில்லை. மாறாக மேகங்கள் கண்ணீர் சிந்துகின்றன” என்று தி.மு.க தொண்டர்கள் கண்ணீர் மல்க தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளிமடைப் பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்காக, கள்ளிமடை பகுதி அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், “டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், மக்களின் மனதைவிட்டு மறைவதில்லை. என்றென்றும் வருந்துகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

 கருணாநிதியின் மறைவுக்காகக் கறுப்புச்சட்டை அணிந்து கள்ளிமடை அ.தி.மு.க-வினர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.