`காவல்துறை இப்படியா நடந்துகொள்வது?’ - சீறும் சி.பி.எம்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து சி.பி.எம் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சென்னைக் காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட கருணாநிதியின் உடலுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறையினர் அலட்சியமாக நடந்துகொண்டதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய அக்கட்சியின் நிர்வாகி பெ.சண்முகம், `கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வருகிறார் என்று போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டே சென்றோம். வி.ஐ.பி-கள் செல்வதற்கென்று அறிவிக்கப்பட்ட வழியில்தான் சென்றோம். காவல்துறையினர் அழைத்துச் செல்வதற்கான எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டத்தில் நசுங்கி மிதிபட்டே செல்ல வேண்டியிருந்தது. காவல்துறையினரின் அலட்சியம் சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது. மிகப்பெரிய தலைவரின் மறைவுக்கு எவ்வளவு மக்கள் வருவார்கள் என்பதை அறியாதவர்களல்ல. எப்படியோ போகட்டும். என்னவோ நடக்கட்டும் என்ற முறையில்தான் இன்று காவல்துறை நடந்துகொண்டது. இது வன்மையான கண்டனத்துக்குரியது’ என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!