வெளியிடப்பட்ட நேரம்: 01:02 (09/08/2018)

கடைசி தொடர்பு:07:07 (09/08/2018)

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான மனு - இன்று இறுதி விசாரணை!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனு மீது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற உள்ளது.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100-வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாக தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.