வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (09/08/2018)

கடைசி தொடர்பு:09:36 (09/08/2018)

களேபர சூழலில் ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலைக் களைந்த எடப்பாடி பழனிசாமி!

களேபர சூழலில் ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலைக் களைந்த எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் என்று ஆகஸ்ட் 7-தேதியன்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அதையடுத்து, திரைமறைவில், சென்னை மெரினா அண்ணா சமாதி வளாகத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்கும் படலம் ஆரம்பமானது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சீனியர் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர்களும் மெரினாவில் இடம் தரலாமே? என்று முதல்வரிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு, உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. ஆனால், அதற்கு தமிழக அரசு அனுமதி தர தயக்கம் காட்டுவதாக செய்தி பரவியதும், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முதல்வர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதோடு, கடிதமும் கொடுத்தார்கள். 

கருணாநிதி

அப்போது அவர்களிடம் மெரினாவில் இடம் தருவதில் உள்ள சிக்கல்கள்களில் குறிப்பாக மத்திய அரசின் சுற்றுச்சுழல் துறையின் அனுமதி வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க குழுவினர் வெளியேறியதும், சீனியர் அமைச்சர்களை அழைக்காமல் உயர் அதிகாரிகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்தார் முதல்வர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலாளர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசினார் முதல்வர். அதன்பிறகு, தலைமைச் செயலாளர் பெயரிலேயே மெரினாவில் இடம் தர முடியாது என்று அறிக்கை ரெடியானது. கருணாநிதி காலமானார் என்கிற அதிகாரபூர்வ செய்தி வெளியானதும், தலைமைச் செயலாளரின் அறிக்கை வெளியிடப்பட்டது. மின்னல் வேகத்தில் இரவோடு இரவாக தி.மு.க  தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டனர். அதுதொடர்பான விவாதங்கள் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டனர்.  

இந்த விவகாரத்தில் எடப்பாடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்றே அ.தி.மு.க வட்டாரத்தில் பேசுகிறார்கள். டெல்லி பி.ஜே.பி மேலிட தலைவர்கள் தரப்பில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணிக்கு ரெடியாகும் தி.மு.க கேட்கும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்தனர். அடுத்து, டி.டி.வி.தினகரன் தரப்பில் எடப்பாடி அரசு மெரினாவில் இடம்கொடுத்தால் அதை ஏக விமர்சனத்துககு உள்ளாக்க காத்திருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் போனது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிரியாக இருந்தவர் கருணாநிதி. அவருக்கு எடப்பாடி இடம்கொடுத்தால் அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவரை புறக்கணிப்பார்கள் என்று டி.டி.வி.தினகரன் தரப்பினர் பேசிக்கொண்டதை முதல்வர் எடப்பாடியிடம் தெரியப்படுத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமி

அதிகாரிகள் தரப்பில், ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கு ஐந்து வழக்குகள் எதிராகப் போட்டிருக்கிறார்கள். அவற்றை வாபஸ் வாங்கினால்தான், இப்போது கருணாநிதிக்கு இடம் தரமுடியும். அது நடப்பது கஷ்டம். பொறுத்திருந்துப் பார்ப்போம் என்றார்களாம். இந்த விஷயம்தான், வழக்கு விசாரணையின்போது முக்கிய விவாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐந்து வழக்குகளையும் சம்பந்தப்பட்டவர்கள் வாபஸ் பெற்றனர். இதனால், ஜெயலலிதாவுக்கு கட்ட இருக்கும் மணிமண்டபத்துக்கான ரூட் கிளியர் ஆனது.

வழக்கு தீர்ப்பை எடப்பாடியின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி ஒரே வரியில் பதில் சொல்லி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதைக்கேட்டு, டி.டி.வி.தினகரன் வாயடைத்துப் போனார். மத்திய அரசின் பிரஸரில் இருந்து விடுபட்டார் எடப்பாடி. இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் ஜெகஜோதியாய் அமைய வழிவகுத்துவிட்டது. இவை அனைத்தையும் யோசித்து செயல்பட்டார் எடப்பாடி என்று பெருமையாகச் சொல்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவு அமைச்சர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்