வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (09/08/2018)

கடைசி தொடர்பு:11:28 (09/08/2018)

தொண்டர்களுக்கு அறிவாலயம்... கருணாநிதிக்கு உயிராலயம்!

அண்ணா அறிவாலயம், தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகழை அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் காலம் கடந்து எடுத்துச்செல்லும் ஒரு காலப்பெட்டகம்.

தொண்டர்களுக்கு அறிவாலயம்...  கருணாநிதிக்கு உயிராலயம்!

``தி.மு.க கட்சி அலுவலகம் எங்கே இருக்கிறது'' என்று கேட்டால் பொதுவாகப் பலருக்கும் தெரியாது. அதேவேளையில், ``அண்ணா அறிவாலயம் எங்கே இருக்கிறது'' என்று கேட்டால், முகவரியுடன் மொத்தத்தையும் ஒப்பிப்பார்கள். அப்படிப்பட்ட அண்ணா அறிவாலயம், தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகழை அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் காலம் கடந்து எடுத்துச்செல்லும் ஒரு காலப்பெட்டகம். எத்தனையோ பிரச்னைகள்... எத்தனையோ தடுமாற்றங்களைக் கடந்து கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த அண்ணா அறிவாலயம் தி.மு.க தொண்டர்களுக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே `அறிவுக் கருவூலம்'-தான். கருணாநிதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றால், அது அண்ணா அறிவாலயத்தை உருவாக்கியதே என்று சொல்லலாம்.

அறிவாலயம் :

1949-ம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டபோது, கட்சிப் பணிகளுக்காக ஓர் அலுவலகம் தேவைப்பட்டது. அதனால், 1951-ம் ஆண்டு ராயபுரத்தில் ஒரு சிறிய கட்டடம் கட்டப்பட்டது. அதுதான் அப்போதைய தி.மு.க அலுவலகம். தி.மு.க-வின் அந்தக் கட்டடத்துக்குப் பேரறிஞர் அண்ணாவால் `அறிவாலயம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில், கட்சியின் பிரமாண்டத்துக்கு ஏற்றவாறு கட்டடம் தேவைப்பட, 1964-ல் தேனாம்பேட்டையில் `அன்பகம்' கட்டப்பட்டது. இந்த அன்பகம்தான், இன்றைய தி.மு.க-வின் இளைஞர் அணி தலைமை அலுவலகம். அதன்பின்பு, தி.மு.க. அசுர வளர்ச்சியடைய, கட்சிப் பணிகளுக்காக அன்பகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், மிகப்பெரிய அளவில் கட்சி அலுவலகம் கட்டியாக வேண்டிய தீர்வுக்குக் கருணாநிதி வந்தார். இந்தக் காரணங்களால் தேனாம்பேட்டையின் மையத்தில், அண்ணா சாலையையொட்டி 86 கிரவுண்ட் நிலம் 1972-ல் வாங்கப்பட்டது. பின்னர், 1980-ம் ஆண்டு அதற்கான கட்டடப் பணி ஆரம்பிக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையால் ஆமை வேகத்தில் நகர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்தது.

அண்ணா அறிவாலயம்

திடீரென ஒருநாள் ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தை, அதிரடியாகக் காலி செய்யச் சொல்லி பொருள்களையெல்லாம் வெளியேற்றியது அப்போதைய எம்.ஜி.ஆர் அரசு. இதனால், கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தை உடனடியாகக் கட்டப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, நிதிப் பற்றாக்குறையினால் ஒவ்வோர் ஊரிலும் நிதி திரட்டும் பணி தீவிரமாகத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில் அறிவாலயத்தைக் கட்டுவதற்காகக் கருணாநிதி எந்த விழாவானாலும் கலந்துகொண்டார். அதற்காகத் தரப்படும் தொகை கட்சியின் நிதியில் சேர்க்கப்பட்டதோடு கட்டடம் கட்டவும் பயன்பட்டது. இதற்காக கருணாநிதி, ஒரேநாளில் பத்து மேடை விழாக்களில் கலந்துகொண்ட நிகழ்வுகளும் உண்டு. இப்படி வழங்கப்பட்ட தொகையெல்லாம், அண்ணா அறிவாலயத்தின் சுவர்களாக உயர்ந்துகொண்டே வந்தது. இதையடுத்து, அந்த உற்சாகத்தில் தொண்டர்களுக்கு உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதி மேலும் அவர்களை ஊக்கப்படுத்தினார். 1985-ம் ஆண்டில் மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் வசூலானது. இதற்குக் காரணம், கருணாநிதியின் விடாமுயற்சியும், கழகத் தொண்டர்களின் கடின உழைப்புமே ஆகும். இதனிடையே, மொத்த இடத்தில் 10 சதவிகித இடத்தை மாநகராட்சிப் பெயருக்குப் பத்திரம் செய்து கொடுத்தால்தான் மேற்படி கட்டடம் கட்டுவதற்கு அனுமதி தர முடியும் என்று சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்தது. அதைக் கொடுத்த பிறகுதான் அண்ணா அறிவாலயத்தைக் கட்ட அனுமதி கொடுத்தது அரசு. இவ்வளவு பிரச்னைகளையும் கடந்துதான் 16-09-1987 அன்று திறப்பு விழா கண்டது, அண்ணா அறிவாலயம்.

கருணாநிதியின் உணர்ச்சி உரை :

கருணாநிதி

அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின்போது பேரறிஞர் அண்ணாவின் மனைவி ராணியம்மையார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சோனியாகாந்தியும் வருகை தந்திருந்தார். இவ்விழாவில் பேசிய கருணாநிதி, ``அண்ணன் நமக்குப் பலமான அடித்தளம் அமைத்து தந்திருக்கிற காரணத்தினால்தான் எதிர்ப்புக் கணைகளை முறியடித்து கழகம் வானளாவ உயர்ந்து நிற்கிறது. கழக உடன்பிறப்புகளின் உழைப்பும் தியாகமும்தான் இங்கு அண்ணா அறிவாலயமாக அழகுற மிளிர்கிறது" என்றவர் தொடர்ந்து, ``இதைக் கண்டு நெகிழ்ந்துபோய் நிற்கிறேன்; மகிழ்ந்துபோய் நிற்கிறேன். என்றாலும், அண்ணன் இல்லை. அந்த அண்ணனுக்காக... அந்த அண்ணன் பெயரால் ஓர் அறிவாலயம் காணுகிற இந்த நிகழ்ச்சியில் நம்முடைய அண்ணியார் அவர்கள் வருகை தந்து எங்களுடைய முயற்சியை வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார், நா தழுதழுக்க. 

அறிவாலயம் எனும் அறிவுக்கடல் :

அண்ணா அறிவாலயம் என்பது வெறும் கட்சி அலுவலகம் மட்டுமல்ல... அதுபோன்ற கட்டடத்தை, வேறு எந்தக் கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பம்சத்தோடு கட்டியிருந்தார், கருணாநிதி. இந்த அறிவாலயத்துக்குள் பேராசிரியர் ஆய்வு நூலகம், கலைஞர் கருவூலம், வெற்றிச்செல்வி இலவச கண் மருத்துவமனை, கலைஞர் அரங்கம், பூங்கா (மாநகராட்சிப் பூங்கா - அண்ணா அறிவாலயம் பாராமரிப்பு) உள்ளிட்டவை அமைந்திருக்கின்றன. இங்குள்ள நூலகத்தில் சுமார் 50,000 புத்தகங்களுடன், அனைத்து வகை ஆய்வு நூல்களும் இருக்கின்றன. மேலும், இந்த நூலகத்தில் முரசொலி, ஹிந்து, தினமணி, எக்ஸ்பிரஸ், தீக்கதிர், விடுதலை, ஃபிரன்ட்லைன், இந்தியா டுடே, குங்குமம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருவூலம்

கலைஞர் கருவூலத்தில் இதுவரை கருணாநிதி அன்பளிப்பாக வாங்கிய சிறிய பேனா முதல் பெரிய அளவிலான உலோகச் சிலைகள் வரை என அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. `நீதிக் கட்சி ஆரம்பம் முதல் இன்றைய தமிழக அரசியல் வரை' அனைத்து நிகழ்வுகளும் புகைப்படச் செய்திகளாகக் கருவூலத்தின் மற்றுமொரு பெட்டகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டகம் 2003-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் திறந்துவைக்கப்பட்டது. அதேபோன்று, இங்குள்ள இலவச கண் மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 30 க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா அறிவாலயத்தினுள் சிறிய திரையரங்கும் உள்ளது. இங்கு திராவிட இயக்கம் கடந்து வந்த பாதை, அண்ணா, பெரியார் இயக்க வரலாறு ஆகியவை குறும்படங்களாகத் திரையிடப்பட்டு வருகின்றன. இங்குள்ள கலைஞர் அரங்கத்தில்தான் கருணாநிதியின் மகளான கனிமொழியின் திருமணம் நடைபெற்றது. அதுபோல தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதற்குண்டான வாடகை வசூலிக்கப்பட்டு கட்சி நிதியில் சேர்க்கப்பட்டது.

கருணாநிதியும் அறிவாலயமும் :

பேராசிரியர் ஆய்வு நூலகம்

தி.மு.க. தொண்டர்கள் பலரும் சொல்வது, கருணாநிதியின் இன்னொரு வீடு என்றால் அது அறிவாலயம்தான். அப்படிப்பட்ட அந்த வீட்டில், காலை 5 மணிக்கே கருணாநிதியைப் பார்க்கலாம். ஒருமணி நேர நடைப்பயிற்சிக்குப் பிறகு கோபாலபுரம் வீட்டுக்குச் செல்வார். பிறகு, சரியாக 10.45 மணியளவில் மீண்டும் அறிவாலயத்துக்கு வந்துவிடுவார். பின்பு, கலைஞர் தொலைக்காட்சியில் மதியம் 1 மணி செய்தியைப் பார்த்துவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் செல்லும் கருணாநிதி, மீண்டும் மாலை 6.30 மணிக்கு அறிவாலயம் வந்துவிடுவார். கலைஞர் தொலைக்காட்சியில் இரவு செய்தியைப் பார்த்துவிட்டு 8.30 மணியளவில் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். இவைதான், கருணாநிதி அறிவாலயத்தில் அன்றாடம் செய்யும் பணிகள். அவர், சென்னையில் இருக்கும் நாள்களில் காய்ச்சல் இருந்தாலும்கூட அறிவாலயம் வராமல் இருந்ததே கிடையாது. அதேபோல், கருணாநிதி வெளியூர் பயணங்களை முடித்துவிட்டு இரவு நேரத்தில் சென்னை வந்தால்கூட, ``அறிவாலயத்துக்கு வண்டியை விடு... ஒரு எட்டுப் பாத்துட்டுப் போவோம்'' என்று தன் கார் டிரைவரிடம் சொல்வாராம்.

கருணாநிதியும் நாய்க்குட்டியும் :

கருணாநிதி, அறிவாலயத்தைத் தன் உயிராக நினைத்தது குறித்து அங்கு நீண்டகாலமாகப் பணி செய்துவரும் ஊழியர்கள், ``தலைவர் (கருணாநிதி) அறிவாலயத்தில் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிய ஆரம்ப காலம் அது. அப்போது ஒருநாள் அறிவாலயத்துக்கு வெளியில் ஒரு நாய் அடிப்பட்டு கத்திக்கொண்டிருந்தது. அடுத்த நாளும் அதுபோல தலைவர் காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும்போது அந்த நாய் கத்திக்கொண்டிருக்க... தலைவர் அவர்கள், `என்ன தினமும் அந்த நாய் கத்திக்கொண்டிருக்கிறது' என உதவியாளர்களிடம் கேட்டார். அதற்கு, `தெரியவில்லை சற்றுப் பொறுங்கள் அய்யா... துரத்திவிடுகிறோம்' என உதவியாளர்கள் சொல்ல... அதற்கு அவர்,  `வேண்டாம்' என்றதோடு, `அந்த நாய்க்கு பிஸ்கெட் பாக்கெட் போடுங்கள்' என்று சொன்னார். அதன்படியே அவர்கள் செய்ய... அடுத்த நாள் அந்த நாய் அறிவாலயத்துக்குள் வந்துவிட்டது. இதையடுத்து, தினமும் இரவு அந்த நாய்க்கு பிஸ்கெட் பாக்கெட் வாங்கிப்போடவும் உத்தரவிட்டார், தலைவர். அதுபோல், தினமும் காலையில் தலைவர் நடைப்பயிற்சிக்கு வரும்போது அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுப்பார். அதுமட்டுமல்லாமல், அந்த நாய்க்குத் தேவையான உணவையும் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். நாளடைவில் அந்த நாய், தலைவர் கார் அறிவாலயத்துக்கு வரும்போதெல்லாம் முதல் ஆளாக வந்துநின்று அவரை வரவேற்கும். பிறகு, தலைவர் நடைப்பயிற்சி போகும்போது அந்த நாயும் அவருடனே செல்லும். யாராவது அந்த நாயை துரத்தச் சென்றால் தலைவர் கடுமையாகத் திட்டுவதோடு, `வரட்டும்... என்னை அதுவும் பாதுகாக்க நினைக்கிறது' என்று சொல்லியபடியே நடைப்பயிற்சி மேற்கொள்வார். இப்படியே பல வருடங்கள் அந்த நாய் அறிவாலயத்தில் இருந்தது. ஒருநாள் திடீரென அந்த நாய் இறந்துவிட்டது. கருணாநிதி அப்போது கட்சி வேலையாக வெளியூருக்குச் சென்றிருந்தார். அவருக்கு, இதுகுறித்து தகவல் சொல்லப்பட்டது. வீட்டிலிருந்து ஒரு சால்வை வரவழைக்கப்பட்டு அறிவாலய வளாகத்திலேயே அந்த நாயைப் புதைக்க உத்தரவிட்டார். அதன்படியே அந்த நாய் அறிவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டது. ஊரிலிருந்து வந்தவர், நாய் புதைக்கப்பட்ட அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுத்தான் வீட்டுக்குச் சென்றார்" என்கின்றனர், கண்ணீருடன்.

கருணாநிதி

கட்டடத்தில் ஒவ்வொரு செங்கல்லும் எங்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி, வளாகத்தில் எங்கெங்கு என்னென்ன மரங்கள் நட வேண்டும் என்பதுவரை அதன் நினைவாகவே வாழ்ந்தவர் கருணாநிதி. அறிவாலயத்தையும் கருணாநிதியையும் ஒருபோதும் யாராலும் பிரிக்க முடியாது. சுருங்கச் சொன்னால், `தொண்டர்களுக்கு அது அறிவாலயம்... ஆனால், கருணாநிதிக்கு அதுதான் உயிராலயம்'.


டிரெண்டிங் @ விகடன்