வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (09/08/2018)

கடைசி தொடர்பு:12:00 (09/08/2018)

மூழ்கிய வீடுகள்... 3 பேர் பலி...11 பேர் மாயம்... இடுக்கி மாவட்டத்தை மிரட்டும் மழை

கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பருவமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயநாடு, பாலக்காடு மற்றும் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெளி உலகத் தொடர்பை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் தொடர் மழை காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 11 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டை சூழ்ந்திருக்கும் மழை நீர்

வீடுகளில் புகுந்த தண்ணீரால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அடிமாலியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து நேற்றுவரை மொத்த கேரள மாநிலத்திலும் பெய்த கனமழை சராசரி அளவைவிட 15% அதிகம் என்றும் இடுக்கி மாவட்டத்தில் சராசரியைவிட 41% அதிக மழை பொழிவை சந்தித்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

இடுக்கி மாவட்டத்தின் மிக முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. உணவு, மின்சாரம் இன்றி பல இடங்களில் மக்கள் தவித்துவருவதாகவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் செய்துகொண்டிருக்கிறார்கள். மழை தொடரும் என்பதால் கலக்கத்தில் உள்ளனர் இடுக்கி மாவட்ட மக்கள்.