சொரிமுத்து அய்யனார் கோயில் விழாவுக்காக அகஸ்தியர் அருவி 5 நாள் மூடல்!

நெல்லை மாவட்டத்தின் சொரிமுத்து அய்யனார் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை அகஸ்தியர் அருவி மூடப்பட்டிருக்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.

அகஸ்தியர் அருவி

மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு பகுதிகளில் அருவிகள் அமைந்துள்ளன. மலையின் உச்சியில் இருந்து மூலிகைகளின் ஊடாக ஓடோடி வரும் தண்ணீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் என்பதால், அருவிகளில் குளிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பாபநாசம் அருகே அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் குளிக்க கூட்டம் அலைமோதுவது வழக்கம். 

இந்த நிலையில், பாபநாசம் அணையின் அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் பல்வேறு மக்களுக்கும் குலதெய்வமாக இருப்பதால் ஆடி அமாவாசை திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 10 நாள்கள் நடக்கும் இந்தக் கோயிலின் ஆடி அமாவாசை திருவிழா 11-ம் தேதி நடக்கிறது. அதுவரையிலும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் தங்கி இருந்தும் தினமும் வந்து சென்றும் வழிபடுவார்கள். பக்தர்களின் வருகையால் வனத்தின் வளம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், வனவளத்தைப் பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்களின் வாகனங்கள் மலையின் மீது அனுமதிக்கப்படவில்லை. பாபநாசத்தில் இருந்து மலையின் உள்ளே செல்ல அரசுப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்துமாறு வனத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. 

தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், செக்போஸ்ட் இருக்கும் இடத்துக்கு மேலே அருவிக்குச் செல்பவர்களாலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இன்று முதல் வரும் 13-ம் தேதி வரையிலும் 5 நாள்களுக்கு அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. அதனால் 5 நாள்களும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதி கோரி வர வேண்டாம் எனவும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!