‘1700 டன் வீடு... ஆனா ஜாக்கி போட்டு 5 அடி தூக்கிடுவோம்!” - `மெர்சல்’ இஞ்ஜினீயர்

முதலில் கட்டடத்தின் அடிப்பகுதியினைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அடி ஆழத்துக்குக் குடைந்து ஜாக்கிகளை வைப்போம். கட்டடத்தினை மொத்தமாகத் தரையிலிருந்து பெயர்த்தெடுத்து, ஜாக்கிகளின் உதவியுடன் நிற்க வைத்த பின்னர், ஒரே நேரத்தில் அனைத்து ஜாக்கிகளையும் இன்ச் பை இன்சாக உயர்த்துவோம்.

‘1700 டன் வீடு... ஆனா ஜாக்கி போட்டு 5 அடி தூக்கிடுவோம்!” - `மெர்சல்’ இஞ்ஜினீயர்

ஈரோட்டில் 1700 டன் எடை கொண்ட 2 மாடி வீடு 1300 ஜாக்கிகளின் உதவியுடன் 5 அடிக்கு ஜம்மென உயர்த்தப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதிவாசிகள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த வீட்டின் உரிமையாளரே ஒரு இஞ்ஜினீயர். ஆனால், டிகிரி படிக்காத இஞ்ஜினீயர்

இஞ்ஜினியர் வீடு

ஈரோடு தில்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் துணி வியாபாரம், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர். இவருக்குச் சொந்தமான 2 மாடி வீடு ஒன்று ஈரோடு தில்லை நகர்ப் பகுதியில் இருக்கிறது. இந்த வீட்டினை அடிப்பகுதியில் அப்படியே  பெயர்த்தெடுத்து, ஜாக்கிகளின் உதவியுடன் வீட்டினைத் தரைப்பகுதியிலிருந்து 5 அடி உயரத்துக்கு உயர்த்தும் வேலை நடைபெற்று வருகிறது. இதனையறிந்த நாம் வீட்டின் உரிமையாளரான தட்சணாமூர்த்தியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

வீடு

``சென்னையில் வேளச்சேரி மாங்காடு பகுதிகளில் நாங்கள் கட்டடங்கள் கட்டி வருகிறோம். கட்டுமானத்துறை சம்பந்தமாக நான் எதையுமே படிக்கவில்லை. இருந்தாலும் புத்தகத்தில் படித்ததை வைத்தும் நண்பர்களின் ஆலோசனையுடனுமே கட்டுமானத் தொழிலை நான் சிறப்பாகச் செய்து வருகிறேன். 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலையின் உயரத்துக்கும் கீழே வீடுகள் கட்டப்பட்டதுதான் பாதிப்புக்குக் காரணம் எனப் பலரும் உணர்ந்தனர். அதனையடுத்து, ஒருசிலர், தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீட்டினை தரையிலிருந்து உயர்த்தினார்கள். அதைப் பார்த்து, `கட்டுமானத் துறையில் இருக்கும் நான் ஏன் இதனையும் செய்யக் கூடாது’ என நினைத்தேன். வடமாநிலத்துக்குச் சென்று இது சம்பந்தமாக நிறையக் கற்று வந்தேன். அதனடிப்படையில், சென்னையில் நான்கு வீடுகளை நானே தரைப் பகுதியிலிருந்து ஜாக்கிகளைப் பயன்படுத்தி உயர்த்தியிருக்கிறேன்” என்றார்.

வீடுதொடர்ந்து பேசியவர், ``அந்த வகையில், தற்போது ஈரோட்டில் இருக்கும் என்னுடைய வீட்டினை தரைப் பகுதியிலிருந்து 5 அடிக்கு மேலே உயர்த்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். சாலையிலிருந்து 2 அடிக்குக் கீழே என்னுடைய வீடு இருப்பதனால், மழைக்காலங்களில் மழைநீர் மட்டுமல்லாது, சாக்கடைக் கழிவுகளும் வீட்டுக்குள் வருகின்றன. எனவே, அதற்காகத்தான் வீட்டினைக் கொஞ்சம் உயர்த்தலாம் என முடிவெடுத்து வேலை செய்து வருகிறேன். கடந்த ஒரு மாத காலமாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 30 வட மாநிலப் பணியாளர்கள் தொடர்ந்து கட்டடத்தை உயர்த்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

முதலில் கட்டடத்தின் அடிப்பகுதியினைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அடி ஆழத்துக்குக் குடைந்து ஜாக்கிகளை வைப்போம். கட்டடத்தினை மொத்தமாகத் தரையிலிருந்து பெயர்த்தெடுத்து, ஜாக்கிகளின் உதவியுடன் நிற்க வைத்த பின்னர், ஒரே நேரத்தில் அனைத்து ஜாக்கிகளையும் இன்ச் பை இன்சாக உயர்த்துவோம். அந்த வகையில், எங்களுடைய 1700 டன் எடை கொண்ட 2200 சதுர அடி வீட்டுக்கு 1300 ஜாக்கிகள் தேவைப்பட்டன. கட்டடத்தை உயர்த்த உயர்த்த கீழே கற்கள் மற்றும் சிமென்ட்டினை வைத்து கட்டுமானம் மேற்கொள்வோம். இப்படி ஒரு அடி கட்டடத்தை உயர்த்தவே 3 நாள்கள் ஆகின்றன. இதுவரை 3.5  அடிக்கு உயர்த்தியிருக்கிறோம். இன்னும் 1 1/2 அடி உயர்த்த வேண்டியிருக்கிறது. 5 அடிக்குக் கட்டடத்தை உயர்த்த மட்டுமே சுமார் 15 லட்சம் வரை செலவாகும். மேலும், வீட்டுக்குள் சில பராமரிப்புப் பணி என அதற்கு ஒரு 15 லட்சம் செலவாகும். 1977-ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தைத் தற்போது இடித்துவிட்டுக் கட்ட வேண்டுமானால், கிட்டத்தட்ட 85 லட்சம் வரை செலவாகும். செலவைக் குறைக்க இந்த மாதிரியான தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது. என்ன கொஞ்சம் கவனமாக, திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்” என்றார்.

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!