வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (09/08/2018)

கடைசி தொடர்பு:12:25 (09/08/2018)

கருணாநிதி சமாதிக்கு நிழல் கொடுக்கும் அரேபியன் சாமியானா!

கருணாநிதி சமாதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நிழல் கொடுக்கும் வகையில் அரேபியன் சாமியானா அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. 

தி.மு.க.தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி மாலை மரணமடைந்தார். அவரின் உடல், அரசு மரியாதையுடன் நேற்று அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்ணா நினைவிடம் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் கருணாநிதிக்கு 1.23 ஏக்கர் இடத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்காலிகமாக அரேபியன் சாமியானா அமைக்கும் பணியில் தி.மு.க-வினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பந்தல் 20 அடி அகலத்திலும் 20 அடி நீளத்திலும் அமைக்கப்படவுள்ளதாக தி.மு.க-வினர் தெரிவித்தனர். இதற்காகப் பணிகள் அங்கு நடந்துவருகின்றன. 

இதுகுறித்து தி.மு.க-வினர் கூறுகையில், ``கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு காலை முதலே தொண்டர்கள், குடும்பம், குடும்பமாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை போலீஸார் ஒழுங்குப்படுத்திவருகின்றனர். பாதுகாப்புப் பணியில் போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் திறந்தவெளியாக இருப்பதால் தற்காலிகமாக அரேபியன் சாமியானா அமைக்க முடிவு செய்துள்ளோம். அதற்காகப் பணிகள் நடந்துவருகின்றன. நினைவிடம், மணி மண்டபம் கட்டுவது தொடர்பாக கட்சித் தலைமை முடிவு செய்யும்" என்றனர்.