அண்ணாவின் மோதிரம்... கருணாநிதியின் முதல் குழந்தை... பேரன் கொடுத்த பேனா  | karunanidhi's ring, murasoli paper, pen was put in his Coffin

வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (09/08/2018)

கடைசி தொடர்பு:13:33 (09/08/2018)

அண்ணாவின் மோதிரம்... கருணாநிதியின் முதல் குழந்தை... பேரன் கொடுத்த பேனா 

கருணாநிதியின் மோதிரம்


அண்ணா அணிவித்த மோதிரத்துடன் கருணாநிதியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைக்குள் தன்னுடைய முதல் குழந்தையாக பாவிக்கும் முரசொலி நாளிதழும் வைக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியின் உடல், நேற்று மாலை அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு குடும்பத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதிக்கு அண்ணா அணிவித்த அன்புப் பரிசு மோதிரத்துடன் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கருணாநிதி எப்போதும் அவரின் சட்டைப்பையில் பேனா வைத்திருப்பார். ஆனால், இறுதி அஞ்சலி  நடந்தபோது கருணாநிதியின் சட்டைப் பையில் அந்தப் பேனா மிஸ்ஸிங். அதைக்கவனித்த கனிமொழியின் மகன் ஆதித்யா, பேனாவை கருணாநிதியின் சட்டைப்பையில் வைத்துள்ளார். 

கருணாநிதிக்கு அண்ணாதுரை அன்பாக மோதிரம் அணிவித்த சம்பவத்தை நம்மிடம் பகிர்ந்தனர் தி.மு.க.வினர். ``கடந்த 1957-ல் தி.மு.க. தேர்தலைச் சந்தித்தபோது கட்சியின் மூத்த தலைவர்களான அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால், கருணாநிதி மட்டும் குளித்தலை தொகுதியில் வெற்றிப் பெற்றார். அடுத்து மாநகராட்சி தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக கருணாநிதி இருந்தார். அதோடு தேர்தல் நிதியாக 11 லட்சம் ரூபாயை வசூலித்துக் கொடுத்தார். மாநகராட்சித் தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார் அண்ணாதுரை. அப்போது, அண்ணாதுரை, நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகை வாங்க  நகைக்கடை ஏறியதில்லை. ஆனால், இன்று மதியம் வேகாத வெயிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி. அந்த கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" என்றார். அந்த தங்க மோதிரத்தை கருணாநிதி இதுவரை கழற்றியதில்லை. அண்ணா அணிவித்த கணையாழி குறித்து நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தின் முதல் பாகத்தில் கருணாநிதி எழுதியுள்ளார்" என்றனர். 

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை தன்னுடைய மகனுடன் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பேச்சாளர் சந்தித்தார். பேச்சாளரின் மகனுக்கு கருணாநிதி அரசு வேலை கொடுத்திருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது பேச்சாளர் சால்வை அணிவித்துள்ளார். அவரின் மகன், கருணாநிதிக்கு மோதிரத்தை அணிவித்தார். கருணாநிதியின் கையைப் பிடித்து விரலின் பாதியளவுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதைத் தடுத்து நிறுத்திய கருணாநிதி, எனக்குத்தான் என்னுடைய அண்ணா, மோதிரம் அணிவித்துள்ளாரே... அதனால் எனக்கு மோதிரம் வேண்டாம்.. அதை நீயே வைத்துக்கொள் என்றதுடன் அதை பேச்சாளரின் மகனின் கையில் அணிவித்துள்ளார். இந்தச் சம்பவம்போல பல மோதிர அணிவிக்கும் நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால், அண்ணா கொடுத்த மோதிரத்தை மட்டும் கடைசி வரை கருணாநிதி கழற்றவில்லை. 

 எம்.ஜி.ஆரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவருடன் கைக்கடிகாரம் புதைக்கப்பட்டது. அதுபோல ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது கைக்கடிகாரமும் புதைக்கப்பட்டது. கருணாநிதியுடன் அவர் அணிந்திருந்த மோதிரம் புதைக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close