வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (09/08/2018)

கடைசி தொடர்பு:15:40 (09/08/2018)

காயத்தால் தவித்த மரநாய்... காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்த பஸ் டிப்போ ஊழியர்கள்

நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் மரநாய் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பிடித்துச் சென்றனர். 

மரநாய்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நெல்லை மாவட்டத்தில் காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், வனவிலங்குள் மாநகரப் பகுதிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே நெல்லை மாநகர எல்லைக்குள் சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட விலங்குகள் நுழைந்துள்ளன.

அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றின் வழியாக மலைப்பாம்புகள் அடித்துவரப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில், நெல்லையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் உள்ளே மரநாய் நுழைந்துள்ளது. பஸ் டிப்போவில் உள்ள கம்பியில் கால் சிக்கியதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து வெளியேற முடியாமல் கிடந்தது.

பணிமனையில் வேலைக்கு வந்த ஊழியர்கள், டெப்போவின் உள்ளே மரநாய் கத்திக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்த மரநாயைக் காப்பாற்றினார்கள். சுமார் 3 மாதக் குட்டியான அந்த மரநாய் வழிதவறி தாமிரபரணி நதிக்கரை வழியாக வந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட வன விலங்கு

அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் வனத்துறையினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் அதை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர். நகருக்குள் மரநாய் நுழைந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.