வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (09/08/2018)

கடைசி தொடர்பு:15:12 (09/08/2018)

ஸ்ரீரங்கம் சிலை வழக்கு! சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவர் சிலை மாற்றப்பட்டிருப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்

``ஶ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டிருக்கிறது. பெரியபெருமாள் சிலையில் சாலிக்ராம கற்கள் காணாமல் போயுள்ளன. இதுகுறித்து ஶ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை'' என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ரங்கராஜன்இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஶ்ரீரங்கம் சிலை மாற்றப்பட்டிருக்கிறதா என்று விசாரித்து ஆறு வாரத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கைத் தொடர்ந்த ரங்கராஜன் கூறுகையில், ``நம்பெருமாள் உற்சவர் சிலை  மாற்றப்பட்டிருக்கிறது என்று ஶ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சி.எஸ்.ஆர் கூட கொடுக்கவில்லை. அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு விசாரணைக்கு வந்ததும், காவல் நிலையத்திலிருந்து எனக்கு அறிக்கை ஒன்று கொடுத்தார்கள். அதில் `புகாரில் உண்மைத் தன்மை இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தது. காவல்துறை யாரையோ காப்பாற்றவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதனால்தான் நீதிமன்றத்தை நாடினேன்'' என்றார்.