வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (09/08/2018)

கடைசி தொடர்பு:16:15 (09/08/2018)

'இன்னும் நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கவில்லை'- அரசுமீது பாயும் டெல்டா விவசாயிகள்

விவசாயி

'தமிழக அரசு சார்பில் நெல்லுக்கு வழங்கப்படவேண்டிய ஊக்கத்தொகை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை' என விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் ஆதங்கத்தோடு பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், சுகுமாறன்‘’கடந்த காலங்களில் மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்த அடுத்த சில நாள்களியே தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பது வழக்கம். குறிப்பாக, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும். இதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்கை முடிவாக எடுத்தால்தான், நெல் அறுவடை நேரத்தில் இதை நடைமுறைப்படுத்த முடியும். ஊக்கத்தொகைகுறித்த தகவல் வெளியானால்தான் விவசாயிகள் உற்சாகத்தோடு சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக, மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1750 ரூபாய் அறிவித்து பல வாரங்கள் கடந்துவிட்டன. தமிழக அரசு, ஊக்கத்தொகைகுறித்து இதுநாள் வரை  ஏன் வாய் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. மத்திய அரசு அறிவித்த 1750 ரூபாய் விலையே போதும் என முடிவெடுத்துவிட்டார்களோ என சந்தேகப்படுகிறோம். குவிண்டாலுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து வழங்கினால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். தமிழக அரசு தொடர்ந்து இதில் காலதாமதம் செய்தால், டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவோம்” என எச்சரித்தார்.