வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (09/08/2018)

கடைசி தொடர்பு:15:34 (09/08/2018)

மாற்றுத்திறனாளி மாணவிகளின் 94 மெழுகுவத்தி அஞ்சலி!

சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாணவிகள், 94 மெழுகுவத்திகளை ஏற்றி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, 94 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாகக் கருணாநிதியின் உடலுக்கு ராஜாஜி அரங்கில் ஏராளமானவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன்காரணமாகத் தமிழகம் முழுவதும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. 

வழக்கம்போல இன்று கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. சென்னை, அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான லிட்டில் பிளவர் காதுகேளாதோர் கான்வென்ட்டில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் முதல்வர் ஜெஸிந்தா ரோஸ்லின் தலைமையில் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மெழுகுவத்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் 94 மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டன. அதாவது, 94 என்று எழுதப்பட்டு அதில் 94 மெழுகுவத்திகள் ஏற்றி ஆசிரியைகளும் மாணவ, மாணவிகளும் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கருணாநிதி மரணம் குறித்து வெளியான செய்திகளைச் சேகரித்த மாணவிகள் அதற்கு முன்புதான் மெழுகுவத்திகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.