கருணாநிதிக்கு சிலை வைத்த தொண்டர்! நள்ளிரவில் பரபரப்பு ஏற்படுத்திய போலீஸ்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி சிலை நிறுவியதால் காவல்துறை அந்தச் சிலையை நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

கருணாநிதி சிலை

50 ஆண்டுக்காலம் தி.மு.க-வின் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. தனது 94 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கருணாநிதி மறைவுக்கு நாடு முழுவதும் தொண்டர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முதன்முதலாகக் குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுசாலை பேருந்து நிறுத்தத்தில் உள்ள தி.மு.க கொடி கம்பத்தின் கீழ் கருணாநிதி உருவ சிலையை நிறுவியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது எனக் கூறி சிலையை அகற்றினர்.

அகற்றப்பட்ட கருணாநிதி சிலை

இது குறித்து விசாரித்தபோது, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிலை வைத்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், தீவிர தி.மு.க வெறியர் என்றும் கருணாநிதிமீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் தெரியவந்தது. இதன் காரணமாகவே, தனது சொந்த செலவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குடியாத்தத்தை அடுத்த பரதராமி செல்லும் சாலையில் கருணாநிதிக்குக் கோயில் கட்டி வந்துள்ளார். பின்னர், அது வருவாய்த்துறை மற்றும் போலீஸாரால் தடுக்கப்பட்டு கோயில் இடிக்கப்பட்டது. கோயிலில் வைக்க அப்போது தயார் செய்யப்பட்ட கருணாநிதி சிலையைப் பாதுகாத்து வந்த கிருஷ்ணமூர்த்தி, தற்போது கருணாநிதி மறைந்ததையடுத்து அவரின் நினைவாக இரவோடு இரவாக சிலையை நிறுவியுள்ளார்" என்று தெரியவந்துள்ளது.

கருணாநிதி சிலை அகற்றப்பட்ட சம்பவத்தால் அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!