வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (09/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (09/08/2018)

தமிழகத்தின் 6 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - ஆட்சியர்களுக்கு நீர்வள ஆணையம் அறிவுறுத்தல்

கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கன அடிக்கும் மேலான நீர் இரண்டு நாள்களில் மேட்டூர் அணைக்கு வர வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

வெள்ளம்

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கனமழையால் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 

இந்தநிலையில், தமிழகத்தின் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ``கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளிலிருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர், இரண்டு நாள்களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரிக் கரையோர மக்களுக்கு அதிக அளவில் நீர் திறக்கப்பட இருப்பது குறித்து எச்சரிக்கை செய்வதுடன், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்வள ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,25,000 கன அடியாக இருக்கிறது. கபினி அணையில் இருந்து 70,000 கன அடி மற்றும் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 55,000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால், மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 25,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.