2018-ன் 813 வழக்குகளில் 16-க்கு மட்டுமே தீர்வு! பெண்கள் ஆணையத்தின் அதிர்ச்சி

சில நாள்களுக்கு முன்பு, 'பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம்' என்று சர்வதேச ஊடகம் வெளியிட்ட சர்வே, இங்கு பெரும் சர்ச்சை எழுப்பியது. பலரும் இதில் இந்தியா முதலிடமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று விவாதித்தது.

2018-ன் 813 வழக்குகளில் 16-க்கு மட்டுமே தீர்வு! பெண்கள் ஆணையத்தின் அதிர்ச்சி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விஷயத்தில், இன்றளவும் தீர்வு காணாதமுடியாத வகையில்தான் இந்தச் சமுதாயம் இயங்கிவருகிறது. பீகார் மாநிலத்தில் 7 வயது முதல் 17 வயது நிரம்பிய 34 சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்முறை, உத்திரபிரதேச மாவட்டத்தில் சட்டத்தை மீறி இயங்கிய அரசு சாரா அமைப்பில் 24 இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஏழு மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்த கொடூரம், தமிழகத்தில் இன்றும் தொடரும் குடும்ப வன்முறைகள், பெண்களின் தற்கொலைகள் என எண்ணற்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறை

சமீபத்தில், தமிழ்நாடு பெண்கள் ஆணையம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில், பெண்களுக்கு நடந்த வன்முறைகள் குறித்தும், அது தொடர்பான வழக்குகள் குறித்தும் ஒரு டேட்டா வெளியிட்டுள்ளது. அதில், பல உண்மைகள் ஆதாரங்களுடன் வேதனைப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, பெண்கள் 813 புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். இதில், 125 வழக்குகள் குடும்ப வன்முறை தொடர்பாகவும், 60 வழக்குகள் சொத்து தகராறு காரணமாகவும், 55 வழக்குகள் பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும், 49 வழக்குகள் வரதட்சணை கொடுமைக்காகவும், 47 வழக்குகள் காவல்துறையினர் தங்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரவில்லை என்றும்  பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த 813 வழக்குகளில், 16 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சியையும் பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வன்முறை

இந்த ஆறு மாதங்களில் குடும்ப வன்முறை, சொத்து தகராறு, பணியிடங்களில் பாலியல் வன்முறை ஆகியவையே பெண்கள் ஆணையத்துக்குக் கிடைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் என்று இந்தத தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.

பணியிடங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பெண்கள் வெளிப்படையாகக் கூற முன்வரத் தயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பல வழக்குகளில் காவல்துறையினரே கணவர் வீட்டாருடன் சேர்ந்து தங்களை மிரட்டி சித்ரவதைப்படுத்துவதாக புகார் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இப்படியான சூழ்நிலை நிலவுகிறது. சில நாள்களுக்கு முன்பு, 'பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம்' என்று சர்வதேச ஊடகம் வெளியிட்ட சர்வே, இங்கு பெரும் சர்ச்சை எழுப்பியது. பலரும் இதில் இந்தியா முதலிடமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று விவாதித்தது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, இந்த சர்வேயில் குறைந்தபட்ச உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கடந்த ஆண்டு, #metoo என்று பிரசாரத்துடன், பல மாதங்கள் சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களும் விவாதிக்கப்பட்டன. பிரபலங்கள் உள்படப் பல பெண்கள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை விவரித்து, பொதுத் தளங்களில் வெளிப்படையாகப் பேசினர். இதனைத் தொடர்ந்து, பல பெண்களுக்கு தங்களின் பாலினம் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட்டது.

ஆனால், இவை அனைத்தும் நாம் மேலோட்டமாகக் கடந்துவிடும் தீர்வுகளாக மட்டுமே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண, அரசிடம் கடுமையான சட்டங்களும், பொதுமக்களிடம் மனிதம், அறம் சார்ந்த புரிதலும் ஏற்பட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!