வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (09/08/2018)

ராஜாஜி ஹால் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்  கூறினார். 

நேரில் ஆறுதல் கூறும் ஸ்டாலின்

உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் கருணாநிதியின் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது, லட்சக்கணக்கான பொதுமக்களும் நேரில் அஞ்சலிசெலுத்தினர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.