வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (09/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (09/08/2018)

கருணாநிதி மறைவு! - ராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி வழிபாடு

 தி.மு.க தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவரது நினைவாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது.

கலைஞர் கருணாநிதி நினைவாக மோட்ச தீபம்

நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், முதன்மையான பொறுப்புகளை வகிப்பவர்கள் இயற்கை எய்தும்போது, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் மோட்சதீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்துவருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலிலும் கடந்த காலங்களில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இயற்கை எய்தியபோது மோட்சதீபம் ஏற்றியது.

இதேபோல கடந்த 7-ம் தேதி, உடல்நலக்குறைவால் 94 வயதில் இயற்கை எய்திய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நினைவாக, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று (வியாழன்) மாலை மோட்சதீபம் ஏற்றப்பட்டது. திருக்கோயில் பணியாளர்களுக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கொண்டுவந்த நலத் திட்டங்களை நினைவுகூரும் விதமாகவும், அவரது ஆன்மா சாந்தி அடையவும் வேண்டி, திருக்கோயில் அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.  இதில் திருக்கோயில் பணியாளர் சங்க நிர்வாகிகள் கஹாரின், கமலநாதன், முனியசாமி, முத்துக்குமார், அழகர்சாமி, நாகராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வேண்டுதல் செய்தனர்.