வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிவாரணம்..! தமிழக அரசு அறிவிப்பு

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கனமழையால் இதுவரை 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினருடன், ராணுவ வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சவாலான மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், கேரள அரசு உள்ளது. மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், 'கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடரிலிருந்து கேரள மக்கள் மீண்டெழுவதற்கு நாம் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!