மெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழக்கில் காட்டியிருக்கலாம் - கனிமொழி காட்டம்

மெரினாவில், கலைஞருக்கு இடம் தரக்கூடாது என்று முனைப்பு காட்டிய முதல்வர், அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் தோல்வி ஏற்பட்டிருக்காது என்று தமிழக அரசை தி.மு.க  மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

ஸ்டெர்லைட் - கனிமொழி

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100-வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற இறுதி விசாரணையில், `தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுமீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும்,  ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்; உற்பத்திப் பணிகளை மட்டும் தொடங்கக் கூடாது என்று நிபந்தனையுடன் தீர்ப்பளித்துள்ளது. 

கனிமொழி

இதுதொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி  தனது ட்விட்டர் பதிவில், `வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  மே 22 அன்று 13 பேர் கொல்லப்பட்ட பிறகு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. வேதாந்தா இந்தத் தடையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில், முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30க்கு துவங்க இருந்த நிலையில், அரை மணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது.  ஏன் தாமதம் என்றால், சி.எஸ்.வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார். கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் அத்தனை முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி, அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால், இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி, வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார்' என்று பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!