வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (10/08/2018)

கடைசி தொடர்பு:12:14 (10/08/2018)

ஒரு பைக்கில் மூன்று பேர்... போலீஸூடன் இரவில் போதை நபர்கள் நடத்திய களேபரம்

தஞ்சாவூரில் இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த மூன்று வாலிபர்களைப் போக்குவரத்துப் பணியில் இருந்த காவலர் வண்டியை நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர்கள் காவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சட்டையைப் பிடித்து தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை நபர்கள்

தஞ்சாவூரின் மையப்பகுதியில் உள்ளது ஆற்றுப்பாலம். இந்த இடத்தில் உள்ள சிக்னலில் எப்போதும் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் இருப்பார்கள். நேற்று இரவு ராஜா என்ற காவலர் போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் மூன்று வாலிபர்கள் வேகமாக வந்தனர். இதைப் பார்த்த ராஜா, அவர்களை நிறுத்தினார். போதையில் இருந்த அந்த வாலிபர்கள் வண்டியை நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவலரின் சட்டையைப் பிடித்து தாக்க முயன்றனர். இதைத் தடுக்க வந்த பெண் போலீஸாரின் கையைப் பிடித்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேலாக  போதை வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களைப் பிடித்து வைத்திருந்து பாதுகாப்புக்காக வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மூன்று பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

போதை நபர்களை பிடித்த பொதுமக்கள்

இந்தச் சம்பவத்தைப் பார்த்த ஒருவர், ``சமீபகாலமாக பணியில் இருக்கும் போலீஸாரை தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. மக்களுக்காக தங்கள் குடும்பங்களை மறந்து காவல் பணியில் இருக்கும் காவல்துறையினரை மக்கள் அனைவரும் மதிக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இதுபோல் பொது வெளியில் நடந்துகொண்டால் அவர்கள்
 மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க