போலீஸுக்கு கொடுக்கிறேன்; உனக்குத் தரமாட்டேன்'- ரூ.8 லட்சத்தை ஏமாற்றிய ஏஜென்டை பதறவைத்த இமாம்

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல லட்சங்களை மோசடி செய்த ஏஜென்டை பணம் கொடுத்து ஏமாந்தவர் கடத்தினார். சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஏஜென்ட்டின் மனைவி, காவல்துறையினருடன் கணவரை மீட்டார். துரிதமாக செயல்பட்ட அரியலூர் காவலர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அரியலூர் வெள்ளாளத் தெருவில், டிராவல்ஸ் அலுவலகம் வைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டாக இருந்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த இமாம் உள்ளிட்ட சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் முருகானந்தம். இமாம் 8,00,000 ரூபாய் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து மூன்று மாதம் ஆகியும் சம்பந்தப்பட்டவர்களை வெளிநாடு அனுப்பாமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்துள்ளார் முருகானந்தம். இந்த மோசடி குறித்து அரியலூர் எஸ்.பி யிடம் இமாம் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் முருகானந்தனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ``பணம் வாங்கியது உண்மைதான் இரண்டு மாதத்தில் கொடுத்துவிடுகிறேன்" என்று முருகானந்தம் கூறியுள்ளார்.

ஆனால், இரண்டு மாதம் கழித்தும் பணம் கொடுக்காததால் முருகானந்தம் வீட்டுக்குச் சென்றுள்ளார் இமாம். ``போலீஸார் பணத்தைக் கொடுக்கச் சொல்லியும் பணத்தைக் கொடுக்காமல் இருக்கிறீர்கள்" என்று கேட்டிருக்கிறார் இமாம். அதற்கு முருகானந்தம், ``போலீஸாருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். உனக்குப் பணத்தைக் கொடுக்க முடியாது. முடிந்தால் பாரு" என்று அசிங்கமாகப் பேசி அனுப்பியிருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த இமாம், திருச்சியில் உள்ள புரோக்கர் மூலமாக முருகானந்தத்தைக் காரில் கடத்தினார். பின்பு திருச்சியில் இருந்துகொண்டு முருகானந்தத்தின் மனைவி செல்வாம்பாளிடம் போனில் தொடர்புகொண்டு பேசிய இமாம், பணத்தைக் கேட்டு மிரட்டியிருக்கிறார். அதற்கு அவரின் மனைவி, ``பணத்தை எங்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும்" என்று கேட்க, பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று போனை துண்டித்திருக்கிறார் இமாம்.

உடனே முருகானந்தத்தின் மனைவி, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். அப்போது, புகார் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே கடத்தல்காரர்களிடம் இருந்து போன் வந்திருக்கிறது. இதை முழுமையாகக் கேட்டுக்கொண்டு காவலர்களிடம் தகவல் கொடுத்திருக்கிறார் முருகானந்தத்தின் மனைவி. போன் நம்பரை காவல்துறையினர் டிராக் செய்தனர். அப்போது, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள குவாரியில் இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் தெரிந்தது. திருச்சி பனையப்பட்டி இன்ஸ்பெக்டர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரிடம் தகவல் சொல்லியிருக்கிறார். அவர் சம்பவம் இடத்துக்குச் சென்றபோது கடத்தல்காரர்கள் ஓடினர். அவர்களைக் காவலர்கள் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பின்பு முருகானந்தத்தை போலீஸார் மீட்டனர். துரிதமாக செயல்பட்டு முருகானந்தத்தை மீட்டக் காவலர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!