24 மணிநேரத்தில் நோட்டீஸ்... 48 மணி நேரத்திற்குள் சீல்... 27 ரிசார்ட்டுகளுக்கு செக் வைக்கும் நீலகிரி கலெக்டர்

நீலகிரி மாவட்டத்தில், யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி ஹோட்டல் மற்றும் காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர். 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவிகிதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அதனால் யானைகள் மட்டுமின்றி வன விலங்குகளும் நகருக்குள் ஊடுருவி விடுவதால் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கடந்த சில வருடங்களுக்கு முன் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். 

இதைத் தொடர்ந்து 10 வருடங்களாக நடந்த வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளைக் கணக்கெடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. கணக்கெடுக்கும் பணிகள் நிறைவுற்ற நிலையில், தற்போது யானைகள் வழித் தடத்தில் உள்ள 309 அறைகள் கொண்ட 39 காட்டேஜ் மற்றும் ஹோட்டல் கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கும் பணியை அதிகாரிகள் இன்று தொடங்கினர். 

 நீலகிரி

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், ``48 மணி நேரத்துக்குள், 27 கட்டடங்கள் காலி செய்யவில்லை என்றால் அவைகளுக்கு சீல் வைக்கப்படும். மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குடியிருப்புகளுக்குப் பொருந்தாது என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என  ஆட்சியர் தெரிவித்தார். 

இதனிடையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகில் யானைகள் வழித்தடம் அமைந்துள்ள பகுதிகளான மசினகுடி, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த 39 ரிசார்ட்டுகளுக்கு கடந்த 9-ம் தேதி, 24 மணிநேரத்தில் நோட்டீஸ் விநியோகித்து 48 மணி நேரத்துக்குள் சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 39ல் 12 ரிசார்ட் உரிமையாளர்கள் மேல் முறையீடு செய்தனர். மீதம் உள்ள 27 ரிசார்ட்டுகளுக்கு அதிகாரிகள் இன்று காலை முதல் நோட்டீஸ் விநியோகம் செய்து வருகின்றனர். அவர்களுடன், உள்ளாட்சி, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!