வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (10/08/2018)

கடைசி தொடர்பு:14:41 (11/08/2018)

``தி.மு.க-வை வழிநடத்த என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?" - விகடன் பேட்டியில் மு.கருணாநிதி பதில்

திமுக தொண்டர்கள்

காவேரி மருத்துவமனை வாசலில் கருணாநிதிக்காக தி.மு.க தொண்டர்கள் சிந்திய கண்ணீர், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் ஒரு சில தொண்டர்கள் செய்த செயல்கள் கொஞ்சம் அதிருப்தியையும் உண்டாக்கின. மருத்துவமனை வாசலில் மொட்டை அடித்துக் கொண்டது, மண் சோறு சாப்பிட்டது என உணர்ச்சிப்பெருக்கில் தொண்டர்கள் செய்த செயல்கள் கருணாநிதியின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானவை என விமர்சனம் எழுந்தது.

கருணாநிதி

கருணாநிதியின் பகுத்தறிவு, நாத்திக கொள்கைகள், தற்போதுள்ள தி.மு.க தொண்டர்களிடம் குறைந்துவிட்டது. இதைப் பற்றி கருணாநிதியிடமே நேரடியாகக் கேள்வியெழுப்பியுள்ளது விகடன். ஆம்,  கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், ``ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?” என்னும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், 

``பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”

அந்தச் சந்திப்பின்போது... அரசியலில், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கும் அவற்றில் ஈடுபட ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கும், கருணாநிதி சொன்ன அட்வைஸ் இதோ... ``அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்களுக்கு காழ்ப்பு உணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.” 



கருணாநிதி


அந்தப் பேட்டியில் கருணாநிதி சொன்ன ஒரு பதிலில், தற்போது மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு மெசேஜ் உள்ளது. 

``தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?” என்று நமது நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த கருணாநிதி, ``தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இன உணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்!"

நீங்க எப்படி பீல் பண்றீங்க