வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/08/2018)

கடைசி தொடர்பு:16:00 (10/08/2018)

குரூப் 2 தேர்வுக்கு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியீடு! - சர்ச்சையில் டி.என்.பி.எஸ்.சி

டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 11.11.2018 அன்று ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தொகுதி 2 (நேர்முகத் தேர்வு உடைய பதவிகள்) முதல்நிலைத் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வுக்கான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில், ''இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையைக் காணவும்'' என்று அறிவித்து இருந்தது. தேர்வாணையத்தின் அந்த அறிவிக்கையைப் பார்த்தால், அது 68 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில், `தமிழ் பாடத்திட்டம்' மட்டும் தமிழில் உள்ளது. மீதி அனைத்து விவரங்களும் ஆங்கில மொழியில்தான் உள்ளன.

அதன் விவரம்: ஏதாவது ஒரு பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை முடித்தவர்கள், இந்தத் தேர்வை எழுதலாம். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களில் இந்தத் தேர்வு நடக்கும். முதல் நிலைத்தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத்தழிழ் (அல்லது பொது ஆங்கிலம்) ஆகியவை இடம்பெறும். 200 கேள்விகள், 300 மதிப்பெண். மெயின் தேர்வில், பட்டப்படிப்புத் தரத்தில் பொது அறிவு பகுதி கேள்விகள் மட்டும் கேட்கப்படும். வினா-விடை பாணியில் (விளக்கம் அளிக்கும் வகையில்) இந்தத் தேர்வு இருக்கும். மொத்த மதிப்பெண் 300. இந்தத் தேர்வுகளில் அடுத்தடுத்து வெற்றி பெறுவோர், இறுதியாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் 40 மதிப்பெண். மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மொத்தம் 1,199 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் 9.9.2018 வரை விண்ணப்பிக்கலாம். மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு குறித்த அறிவிப்புகள், முதல் நிலைத்தேர்வு முடிந்த பிறகே வெளியிடப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க