`முதலில் நம்ப வைக்கணும்... பிறகு ஏமாற்றணும்' - திரைப்பட இயக்குநரின் நிஜ ஸ்டோரி  | Chennai police files cheating case against cinema director

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (10/08/2018)

கடைசி தொடர்பு:14:39 (11/08/2018)

`முதலில் நம்ப வைக்கணும்... பிறகு ஏமாற்றணும்' - திரைப்பட இயக்குநரின் நிஜ ஸ்டோரி 

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி திரைப்பட இயக்குநர் கொடுத்த காசோலை

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாயைத் திரைப்பட இயக்குநர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். அவரின் நிஜக்கதையைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ஷானாஸ்பேகம். இவர், வீட்டு வேலை செய்துவருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, திருவான்மியூரில் உள்ள திரைப்பட கம்பெனிக்கு சமையல் வேலைக்குச் சென்றார். அங்குள்ளவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தார். அப்போது, திரைப்பட கம்பெனியின் உரிமையாளர் ரவிக்குமாருடன் ஷானாஸ்பேகத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, ரவிக்குமார், 10 நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தரும் திட்டம் தன்னிடம் இருப்பதாகக் ஷானாஸ்பேகத்திடம் கூறினார். அதை நம்பிய அவர், முதலில் 5 லட்சம் ரூபாயைக் கொடுத்தார். பத்து நாள்களில் 10 லட்சம் ரூபாயை ரவிக்குமார் கொடுத்தார். இதனால் ஷானாஸ்பேகம் மகிழ்ச்சியடைந்தார். தொடர்ந்து தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைத் திரும்ப தரவில்லை என்று ஷானாஸ்பேகம் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களே ரவிக்குமார் குறித்து சில தகவல்களைச் சேகரித்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்  கூறுகையில், ``முதலில் ஷானாஸ்பேகம் கொடுத்த 5 லட்சம் ரூபாயை இரட்டிப்பாக்கித் தந்துள்ளார் ரவிக்குமார். பணம் இரட்டிப்பு திட்டம் குறித்து ஷானாஸ்பேகம் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறினார். நாங்களும் அதை நம்பி, 20 பேர் சேர்ந்து 55 லட்சம் ரூபாய் வரை ரவிக்குமாரிடம் கொடுத்தோம். ஆனால், இந்தமுறை அவர் ஏமாற்றிவிட்டார். பலமுறை அவர் எங்களுக்குக் கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்துள்ளன. பணத்தை ரவிக்குமாரிடம் கேட்டு நாங்கள் தொந்தரவு செய்தோம். இதனால் திருவான்மியூர் அலுவலகத்துக்கு எங்களை வரச்சொன்னார். அதன்படி நாங்கள் அங்கு சென்றோம். அப்போது, அவர், எங்களுக்குப் பிரியாணி விருந்துக் கொடுத்தார். அதன் பிறகும் எங்களுக்குப் பணத்தை திரும்ப தரவில்லை. இதனால், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். எங்களை ஏமாற்றிய ரவிக்குமார், ஒரு திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். எங்களைப்போல அவர் பலரை ஏமாற்றியுள்ளார்" என்றனர்.  

போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் விசாரித்துவருகிறோம். மேலும், ரவிக்குமாரிடம் விசாரித்தால்தான் உண்மை என்னவென்று தெரியும்" என்றனர்.

சினிமா பாணியில் நடந்த சம்பவம் 

சம்பவத்தன்று பணத்தைக் கொடுத்தவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் ரவிக்குமார். அதன் பிறகு அவர், உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டார். காலையில் கண்விழித்து பார்த்தபோது, அவரின் அலுவலகம் காலியாக இருந்துள்ளது. சினிமாவில் வருவதுபோல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பாதிக்கப்பட்டவர்களே அலுவலகத்திலிருந்த அனைத்து பொருள்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதையடுத்து ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார்.  யூடியூப், ஃ பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பணம் இரட்டிப்பு திட்டம் குறித்து பதிவு செய்தும் ரவிக்குமார் ஏமாற்றியுள்ளதாகத் தகவல் உள்ளது. கடந்த 2015- ம் ஆண்டு மும்பையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை ரவிக்குமார் ஏமாற்றியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள், ரவிக்குமாரின் கார் ஓட்டுநரைப் பிடித்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவரை விசாரிக்காமல் போலீஸார் அனுப்பிவைத்துவிட்டனர். அதற்காகக் குறிப்பிட்ட தொகை போலீஸ் உயரதிகாரிகளுக்கு கைமாறியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். போலீஸாரிடம் ரவிக்குமார் சிக்கினால் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.