`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!'- மத்திய அரசு வாதம்

'ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

ராஜீவ் காந்தி

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர், நீண்ட காலமாக சிறையில் இருந்துவருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் 18-ம் தேதி அவர்களை விடுவிக்க அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஏற்கெனவே 2015-ம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், 'மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்கக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கருத்து கேட்டது. 

இந்த வழக்கில், மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டர் பிங்கி ஆனந்த்  உச்ச நீதிமன்றத்திடம் கூறியதாவது, '' ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது மோசமான முன்னுதாராணமாகிவிடும். ராஜீவைக் கொன்றவர்களில் 4 பேர் வெளிநாட்டவர்கள். இந்தியப் பிரதமரைக் கொன்றதோடு மட்டுமல்லாமல் 15 இந்தியப் பிரஜைகள் மரணத்துக்கும் காரணமாக இருந்துள்ளனர். இவர்களை விடுவிப்பது, பிற்காலத்தில் இதைவிட கொடூரச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பை ஏற்படுத்திவிடும். இந்திய முன்னாள் பிரதமரைக் கொடூரமாகக் கொலைசெய்தவர்கள், கருணை பெறத் தகுதி இல்லாதவர்கள். இந்திய குற்றவியல் தண்டனைச்சட்டம் 435 சட்டம் (மாநில அரசு குற்றவாளிகளை விடுவிக்க அனுமதி அளிக்கும் சட்டம்) தமிழ்நாடு அரசின் முடிவுக்குப் பொருந்தாது. மத்திய உள்துறை அமைச்சகமும் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார். 

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருந்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!