வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (10/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (10/08/2018)

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் பதில்மனு தாக்கல்செய்ய ஆ.ராசா, கனிமொழிக்குக் கூடுதல் அவகாசம்!

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் பதில்மனு தாக்கல்செய்ய, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியிருக்கிறது. 

டெல்லி உயர் நீதிமன்றம்

2007-2008-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக, சி.பி.ஐ கடந்த 2011-ம் ஆண்டில் வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில், தி.மு.க-வின் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது. பாட்டியாலா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இன்று பதில்மனு தாக்கல்செய்ய ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, யுனிடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்த்ரா தரப்பில் மட்டுமே பதில்மனு தாக்கல்செய்யப்பட்டது. ஆனால், ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. சஞ்சய் சந்த்ராவின் பதிலைப் பதிவுசெய்துகொண்ட நீதிமன்றம், ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.