வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/08/2018)

ஷோரூமில் புகுந்த உடும்பு... அலறிய ஊழியர்கள்... மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தேனி மாவட்டம், உழவர் சந்தை அருகே உள்ளது மீறுசமுத்திர கண்மாய். சமுத்திரம்போல பரந்து காணப்படும் இந்தக் கண்மாய் கரையோரம் உள்ள குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களுக்குள், உடும்பு புகுந்து மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

உடும்பு

இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான இருசக்கர வாகன ஷோரூமில் புகுந்த உடும்பு, அங்கு பணிபுரியும் ஊழியர்களை அச்சுறுத்தியது. அதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தேனி மாவட்ட அலுவலர் தென்னரசு மற்றும் தேனி நிலைய அலுவலர் (போக்குவரத்து) தர்மர் ஆகியோரது தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள், மூன்று அடி நீளம் கொண்ட உடும்பை பிடித்தனர்.

உடும்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்

"சில மாதங்களுக்கு முன்னர் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலர்களை அச்சுறுத்திவந்த உடும்பை பிடித்தோம். மீறுசமுத்திர கண்மாயையொட்டிய பகுதிகளில் உடும்பு அதிகமாக உள்ளது. பிடிபட்ட உடும்பை, வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடுவோம்" என்கின்றனர் தீயணைப்புத்துறை அதிகாரிகள். தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பிடிபட்ட உடும்பை, தேனியில் உள்ள வீரப்ப அய்யனார் கோயில் வனப்பகுதிக்குள் விட்டனர் வனத்துறையினர்.