கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்! - தி.மு.க வலியுறுத்தல் | DMK seeks Bharat Ratna for Karunanidhi

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (10/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (10/08/2018)

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்! - தி.மு.க வலியுறுத்தல்

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

கருணாநிதி

தி.மு.க தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்தவரும் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவருமான கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது. 
இதுகுறித்து மாநிலங்களவையின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ``நாட்டின் முக்கியமான தலைவராக விளங்கிய கருணாநிதி 95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில், 80 ஆண்டுகால வாழ்வை பொது வாழ்வுக்காக அவர் அர்ப்பணித்தார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் பாடுபட்டார். எழுத்தாளர், பேச்சாளர், வசனகர்த்தா எனப் பன்முகக் கலைஞரான அவர், 80 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவரது வாழ்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி மற்றும் சுய மரியாதைக்காகத் தன் இறுதி மூச்சுவரை அவர் போராடினார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அதுவே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்’’ என்றார்.