வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (10/08/2018)

கடைசி தொடர்பு:18:20 (10/08/2018)

``பேனா கொடுங்க சார்... தாத்தா சமாதிக்குள்ள வைக்கணும்!" - கருணாநிதிக்குப் பேனா... நெகிழும் தினேஷ் ஐ.ஏ.எஸ் #VikatanExclusive

`தாத்தா சமாதி குழிக்குள் இந்தப் பேனாவை வைக்க வேண்டும்' எனச் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

``பேனா கொடுங்க சார்... தாத்தா சமாதிக்குள்ள வைக்கணும்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சியை மிகத் திறமையாக நடத்திமுடித்துள்ளனர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையிலான பத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் களத்தில் படு சுறுசுறுப்புடன் செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, கருணாநிதி சமாதி குழிக்குள் வைக்கப்பட்ட பேனா ஒன்று. கடைசிநேர டென்ஷனில் பேனாவை வைப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் மறந்துவிடவே, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து பேனாவை வாங்கி வந்து சமாதி குழிக்குள் வைத்தார் கனிமொழியின் மகன் ஆதித்யா. 

கருணாநிதி சமாதி குழிக்குள் வைக்கப்பட்ட அந்தப் பேனாவுக்குச் சொந்தக்காரர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ். மறுவாழ்வுத் துறையின் இயக்குநராகவும் பொதுத்துறையில் துணைச் செயலாளராகவும் இருக்கிறார். அவரைப் பற்றி விசாரித்தோம்." கன்னியாகுமரியைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா, அம்மா இருவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார். 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓவாகப் பணியில் இருந்தார். அந்த நேரத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகப் பாடுபட்டார், கலெக்டர் உதயசந்திரன். இந்தச் சம்பவத்தில் உதயசந்திரனுக்கு பக்கபலமாகச் செயல்பட்டவர் தினேஷ். இதற்காக, மாநில அரசின் விருதும் அவருக்குக் கிடைத்தது. 2006-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், அந்தப் பகுதியில் சமத்துவப் பெருவிழாவை நடத்தினார்.  அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் தினேஷின் பங்கு அதிகம். 2007 மதுரை மேற்கு இடைத்தேர்தலில், தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். மதுரை டி.ஆர்.ஓ-வாகவும் பொறுப்பு கலெக்டராகவும் திறம்படச் செயலாற்றியவர். 2012-ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்ஸாகப் பதவி உயர்வு பெற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார். கருணாநிதி இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் அவருடைய பங்களிப்பும் அதிகம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பேசினோம். 

கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டபோது உங்கள் பணி என்ன? 

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்``இறுதிச் சடங்கை நடத்தி முடிக்கும் பொறுப்பு காலையில் வழங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு பணி ஒதுக்கப்பட்டது. சமாதியில் ராணுவத்துடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள், வி.ஐ.பி புரோட்டகால், குழிக்கான பணிகள் ஆகியவற்றைக் கவனித்துக்கொண்டிருந்தேன்". 

ஐந்து மணி நேரத்துக்குள் எப்படி அனைத்துப் பணிகளையும் முடிக்க முடிந்தது? 

``உண்மையிலேயே சவாலான பணிதான். எங்களுக்குக் கிடைத்த அவகாசத்துக்குள் என்ன செய்ய முடியும் என்பதைத் தாண்டி, அனைத்தையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது". 

கருணாநிதியை அடக்கம் செய்த குழிக்குள் உங்கள் பேனா வைக்கப்பட்டது. இப்படியொரு சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது?

``இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கனிமொழி மேடத்தின் மகன் ஆதித்யா என்னிடம் வந்து, `பேனா கொடுங்க சார்..' எனக் கேட்டார். நான் கொடுத்ததும், `தாத்தா சமாதி குழிக்குள் இந்தப் பேனாவை வைக்க வேண்டும்' எனச் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும், எனக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. பேனாவைக் கொடுத்ததும், `இப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதை என்னுடைய நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு அடையாளமாக இந்தப் பேனாவுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?' எனக் கேட்டேன். அவரும் சம்மதித்தார். உண்மையிலேயே நெகிழ்ச்சியான சம்பவமாக அது அமைந்தது". 

கருணாநிதியுடனான உங்கள் அனுபவம் பற்றிச் சொல்ல முடியுமா? 

``மதுரை டி.ஆர்.ஓ-வாக இருந்தபோது, சில மாதங்கள் பொறுப்பு கலெக்டராகவும் இருந்தேன். அப்போது, `தியாகி வைத்தியநாதனின் சிலையைச் சரியாகப் பராமரிப்பதில்லை' என தினசரி நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதைப் பற்றி பேசுவதற்காகத்தான் என்னுடைய லைனுக்கு நேரடியாக வந்தார் முதல்வராக இருந்த கருணாநிதி. அவர் என்னிடம், `தியாகி வைத்தியநாதனின் சேவைகளை நாம் மதிக்க வேண்டும். அந்தச் சிலையைப் பராமரிக்க உடனே நடவடிக்கை எடுங்கள்' என உத்தரவிட்டார். முதல்வரே நேரடியாக என்னிடம் பேசியது மகிழ்வைத்தந்தது. அவருடைய சமாதிக்குள் என்னுடைய பேனா வைக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றார் நெகிழ்ச்சியுடன்.