`கோரிக்கை வைத்தால் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைப்போம்’ - அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

``சட்டச்சிக்கல்இருந்ததால்தான்மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்வதில் அரசு தயக்கம் காட்டியது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மணிமண்டம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தால் முதல்வர் பரிசீலனை செய்து முடிவினை அறிவிப்பார்” என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “தூத்துக்குடியில் கடந்த வருடம் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டதுபோல, இந்த மாவட்டத்தின் 10 வது தாலுகாவாக ஏரல் தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவையொட்டி அனுசரிக்கப்பட்டு வரும் 7 நாள் துக்கத்துக்குப் பிறகு, ஏரல் தாலுகா அலுவலகம் திறக்கப்பட உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிட முடியாது. மீண்டும் ஆலை திறப்பதற்கான உத்தரவை வழங்கிட முடியாது. நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதி எனப் பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை. ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். மீண்டும் ஆலை திறக்கப்படும் எனப் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை.

மறைந்த முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி இறப்புக்குப் பிறகு, அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தி.மு.க-வினர் மனு அளித்தபோது, மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கூடாது என ஏற்கெனவே போடப்பட்ட 5 வழக்குகளால் உள்ள சட்டப்பிரச்னைகளையும் சிக்கல்களையும் காரணம் காட்டிதான் அடக்கம் செய்ய, அரசுத் தரப்பில் தயக்கம் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரத்தில் 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. கருணாநிதி மறைந்த தகவல் வெளியானதும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி ஏதும் இல்லாமல், தமிழக அரசின் செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் அவரது உடலை மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்க அனுமதி அளித்து அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் பாதுகாப்புக்காகக் காவல்துறையினர் மூலமும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அத்துடன், ஒருநாள் பொது விடுமுறை அளித்தும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மெரினாவில் இடம் ஒதுக்கிட தீர்ப்பு வந்த பிறகு, 5 மணி நேரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பில் அவரது உடல் அடக்க ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. ஆனால், அடக்கம் செய்ய முதல்வர் இடம் கொடுக்கவில்லை எனத் தி.மு.க-வினர் குறைகூறுகிறார்கள். தற்போது, இடம் அளிக்க வழிவகை செய்ய முடியாமல் இப்படியொரு சட்டச் சிக்கலை ஏற்படுத்தியது யார் என்பது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடரப்பட்ட வழக்கு மூலம் தி.மு.க-வினரே அதில் சிக்கிக்கொண்டனர். கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு மரபுப்படிதான் நடந்துகொண்டது. ஆனால், தி.மு.க-வினர் மரபை மீறி செயல்படுகிறார்கள். தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மணி மண்டபம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதை முதல்வர் பரிசீலனை செய்து முடிவை அறிவிப்பார்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!