வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (10/08/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; முதல்கட்ட விசாரணை முடிந்தது; விரைவில் அடுத்தகட்ட விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்,  பாதிக்கப்பட்டவர்களிடம் முதல் கட்டமாகத் தனது நேரடி விசாரணையை  முடித்துள்ளது. விரைவில் 2-ம் கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளது.

aruna jagathesan

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மே 22-ம் தேதி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்களின் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,  2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். இந்தச்  சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய,  ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன்  3-ம் தேதி தூத்துக்குடியில், தன் விசாரணையைத் தொடங்கியது.

இதற்காக, சென்னை கிரீன்வேஸ் சாலையிலும், துாத்துக்குடி பழைய சுற்றுலா மாளிகையில் முகாம் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த ஆணையத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவம்  பற்றி தகவல் அளிப்பவர்கள், சாட்சியம் அளிப்பவர்கள்  கடந்த ஜூன்  22-ம்  தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ தாக்கல்செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு, கடைசித் தேதி  ஜூன் 30 வரை என நீட்டிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், சாட்சிகள் அஃபிடவிட் தாக்கல் செய்யும் கடைசித் தேதி,  ஜூலை 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சாட்சி சொல்பவர்கள் அனைவரும் அஃபிடவிட் தாக்கல் செய்துவிட்ட நிலையில், இந்த விசாரணை ஆணையம் தனது முதல்கட்ட விசாரணையை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி (இன்று) வரை விசாரணையை நடத்தியது. நாள் ஒன்றுக்கு  4 பேர்கள் என்ற கணக்கில், 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, 8-ம் தேதி விசாரணை நடைபெறவில்லை. அன்று விசாரிக்கப்படவேண்டியவர்களையும்  சேர்த்து,  கடந்த 9-ம் தேதி விசாரணை நடைபெற்றது.

முதல் நாள் விசாரணையில்,  சுப்புராஜ், காளிமுத்து, சண்முகராஜ், நெல்சன் ராஜ், முத்துராஜ், சேர்மதுரை ஆகிய 6 பேரிடம் விசாராணை நடைபெற்றது.  இரண்டாம் நாளான இன்று  விஜயகுமார், இசக்கி, கிளின்ஸ்டன்  மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாயார் வினிதா ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடைபெற்றது.  இதுவரை சம்மன் அனுப்பப்பட்ட 12 நபர்களில்  2  பேர் மட்டும் ஆஜராகவில்லை.  இனி வரும் நாள்களில் பாதிக்கப்பட்டவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பத்திரிகையாளர்கள்  ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க