327-வது நாளாக சிறையில் இருக்கும் முகிலன் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்!

கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, 327-வது நாளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலியல் போராளியான முகிலன், இன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முகிலன்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முகிலன் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்கள் ஒரு லட்சம் பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்குகளில் முகிலனைக் கைதுசெய்த போலீஸார், அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதற்காக, அவர்மீது தேசத்துக்கு எதிராகப் போராடிய பிரிவில் வழக்குத் தொடரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, முகிலனை பாளையங்கோட்டை சிறையிலிருந்து மாற்றிய சிறைத்துறையினர், மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சூழலில், இன்று அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான கூடங்குளம் வழக்குகள் விசாரணைக்கு வந்ததால், அவரை மதுரைச் சிறையிலிருந்து போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துவந்திருந்தனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின்னர், வாகனத்தில் ஏற்றுவதற்காக போலீஸார் அழைத்துச்சென்றபோது, ’’மக்களுக்காகவும் மண்ணைக் காக்கவும் குரல் கொடுத்தால்,' தேசத்துரோகி' என்று தமிழக அரசு முத்திரை குத்துகிறது. ஆனால், 42 சதவிகிதம் கமிஷன் அரசாக செயல்படுகின்ற அவர்கள் தேசபக்தர்களா? மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தியை காவல்துறை கைதுசெய்ய முயன்றதைக் கண்டிக்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கோஷம் எழுப்புகையில், ‘’’கோவையில், குடிநீரை பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்கு தாரைவார்க்காதே; ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆய்வுக் குழுவின் கிரானைட் ஆய்வு அறிக்கையை சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்; ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடினாலோ, 8 வழிச் சாலையை எதிர்த்தாலோ, ஹைட்ரோகார்பனை எடுக்கக் கூடாது என்றாலோ தேசத்துரோக வழக்கு போடுவதைக் கண்டிக்கிறோம்’’ என கோஷமிட்டார். அவரை போலீஸார் வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!